☰
×

நாளை முதல் டாஸ்மாக்கில் அமலுக்கு வரும் ரூ.10 சமூக நல வரி..!

 

டாஸ்மாக்கில் நாளை முதல் மது பாட்டில்களின் விற்பனை விலை, சுற்றுச்சூழல் வரி மற்றும் காலி பாட்டில் திரும்பப் பெறும் தொகைகளுக்கான புதிய நடைமுறைகள் குறித்து டாஸ்மாக் நிர்வாகம் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வரும் நவம்பர் 1 முதல் தமிழ்நாடு மதிப்பு கூட்டப்பட்ட வரிச் சட்டத்திருத்தத்தின்படி, ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் ரூ. 10, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரியாக விதிக்கப்படும் என்றும், இந்த ரூ. 10 கட்டணம் இனி மது பாட்டிலின் அதிகபட்ச விற்பனை விலைக்குள்ளேயே (Maximum Retail Price) சேர்த்து முறைப்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு, அரசாணை மூலம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், 'டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபானம் வாங்கும் போது "பைபேக்" (Buy-Back) திட்டத்திற்காக தனியாக வசூலிக்கப்பட்ட ரூ. 10, இனி தனித் தொகையாக வசூலிக்கப்பட மாட்டாது. வரும்​ நவம்பர் 01-ம் தேதி முதல், பாட்டிலின் அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல் நுகர்வோரிடம் எந்தக் கூடுதல் தொகையும் பெறக் கூடாது. அனைத்து மது பாட்டில்களும் கண்டிப்பாக எம்ஆர்பி விலைக்கு மட்டுமே விற்கப்பட வேண்டும்.

​ஒருவேளை எம்ஆர்பி விலைக்கு மேல் கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டால், அது அனுமதியற்ற வசூலாகக் கருதப்பட்டு, சம்பந்தப்பட்ட கடை ஊழியர்கள் மற்றும் மேற்பார்வை அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

​கடைகளில் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் (Reverse Vending Machine) முழுமையாகப் பொருத்தப்படும் வரை, காலி மதுபாட்டிலைத் திரும்பக் கொடுக்கும் நுகர்வோருக்கு ரூ.10 வழங்கும் முறை வழக்கம்போல் தொடரும். இந்தத் தொகை பாட்டில் விலையில் உள்ள செஸ் (Cess) தொகையிலிருந்து வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

மேலும், காலி மதுபாட்டில்களை திருப்பி கொடுத்தால் ரூ. 10 வழங்கப்படும் என்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தெளிவாக எழுதப்பட்ட அறிவிப்புப் பலகையை அனைத்து சில்லறை விற்பனைக் கடைகளின் முன்பும் நாளைக்குள் காட்சிப்படுத்த வேண்டும்' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.