ரவுடி ‘தொப்பை கணேசன்’ என்கவுண்டர்... சென்னையில் பரபரப்பு
5 கொலை வழக்குகள் கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய தொப்பை கணேசனை தனி பணிப்படை போலீசார் சுட்டு என்கவுண்டர் செய்தனர்.
சென்னை எம்.கே.பி நகர் பி.வி. காலனியைச் சேர்ந்த தொப்பை கணேசன் மீது ஐந்து கொலை வழக்குகள், ஏழு கொலை முயற்சி வழக்குகள், 14 கொள்ளை வழக்குகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் ரூ.25 லட்சம் பணம் மற்றும் 15 சவரன் நகை கொள்ளை சம்பவம், மூன்று கஞ்சா தொடர்பான வழக்குகள் உட்பட பல குற்றச்சாட்டுகளிலும் அவர் தொடர்புடையதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு துப்பாக்கி முனையில் போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்த தொப்பை கணேசன், பின்னர் ஜாமினில் வெளியே வந்த பிறகு மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நிலுவையில் உள்ள வழக்குகளில் அவரை கைது செய்ய போலீசார் தேடி வந்தனர். அவர் மாதவரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, தனிப்படை போலீசார் இன்று காலை மாதவரம் சின்ன ரவுண்டானா அருகே சென்று அவரை பிடிக்க முயன்றனர். அப்போது போலீசாரைக் கண்டதும், கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அண்ணா நகர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் காவலர் தினேஷ்குமார் ஆகியோரை கணேசன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் தற்காப்பு நடவடிக்கையாக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில், கணேசனின் இடது மார்பில் குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
என்கவுண்டரில் உயிரிழந்த தொப்பை கணேசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.