×

"தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் ரோசய்யா" : சசிகலா அறிக்கை!!

 

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா மறைவிற்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநரும்,  ஆந்திரப் பிரதேசத்தின் முதல் அமைச்சராகவும் பணியாற்றிய ரோசய்யா இன்று  உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 88. ஆந்திராவின் கட்டடங்கள், சாலைகள், வீட்டு வசதி, போக்குவரத்து, உயர்கல்வி, உள்துறை, நிதி மருத்துவம் ஆகிய துறைகளில் அமைச்சராக பணிபுரிந்தவர்.  இவர் ஆந்திர மாநிலத்தின் நிதி நிலை அறிக்கையை 16 முறை தாக்கல் செய்த பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்.  ரோசய்யாவின் மறைவிற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு சசிகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தமிழக முன்னாள் ஆளுநருமான ரோசய்யா அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.ரோசய்யா அவர்கள் மிகவும் எளிமையானவர், கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரையும் சமமாக மதிக்கக்கூடிய பண்பாளர்.  நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதல்வராக பணியாற்றிய வேளையில், தமிழக ஆளுநராக ரோசய்யா அவர்கள், திறம்பட செயலாற்றினார். நம் புரட்சித்தலைவி அம்மா அவர்களை, தன் சொந்த மகளாகவே கருதி தன் அன்பை வெளிப்படுத்தினார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தமிழகத்தின் வளர்ச்சிக்காக மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் ரோசய்யா அவர்கள் மிகவும் உறுதுணையாக இருந்தார்.  பெரியவர்  ரோசய்யா அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.