”உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்; ஆனால் கல்வித் தரம் இல்லை” - ஆளுநர் ரவி
அனைத்து ஐஐடி முன்னாள் மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “டெக்னாலஜி ஃபார் பாரத் 2026' உச்சி மாநாட்டில் ஆளுநர் ரவி கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, “தமிழ்நாடு ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான பொறியாளர்களை உருவாக்குகிறது, உயர்கல்வியில் அதிகபட்ச மொத்த சேர்க்கை விகிதத்தைக் கொண்டுள்ளதுடன், அதிக எண்ணிக்கையிலான பேட்டன்ட் உரிமைகளைப் பதிவு செய்கிறது என்பதால், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தில் ஒரு தலைவராக உருவெடுப்பதற்கான மகத்தான ஆற்றல் தமிழ்நாட்டுக்கு உள்ளது. உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம், ஆனால் கல்வித் தரம் இல்லை. பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பல பேராசிரியர்கள் தகுதி வாய்ந்தவர்களாக இல்லை. பேராசிரியர்கள் தகுதியானவர்களாக இல்லாததால்தான் தரமான பொறியாளர்களை உருவாக்க முடியவில்லை. பள்ளிக் கல்வி, உயிர்கல்வி, பிஹெச்டி ஆகிய நிலைகளில் தரமான கல்வியை உறுதி செய்ய வேண்டும்.
முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு பின்னோக்கி செல்கிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் வளர்ச்சியிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் கல்வித் தரத்தை மேம்படுத்த அவசரத் தலையீடு தேவை” என்றார்.