"காந்திக்கு பின் இந்த நாட்டை புரிந்துகொண்ட ஒரே நபர் பிரதமர் மோடிதான்" - ஆளுநர் ரவி
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவான தின விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார்.
தமிழ்நாடு, பஞ்சாப், மத்திய பிரதேசம் ,கேரளா ,கர்நாடகா, ஹரியானா ,சத்தீஸ்கர், ஆந்திர பிரதேசம், புதுச்சேரி,லட்சத்தீவு ,டெல்லி ,சண்டிகர், உத்தரகாண்ட், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லடாக், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவான தின விழா நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் இன்று கொண்டாடப்பட்டது. பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவிகள் மாநிலங்களின் கலாச்சாரங்கள் மற்றும் அவர்களின் வாழ்வியலை பறைசாற்றும் விதமாக கண்காட்சியில் கலந்து கொண்டனர். கண்காட்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆளுநர் ரவி பரிசுகளை வழங்கினார்.
பின்னர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மேடையில் பேசுகையில், “கடந்த 2 ஆண்டுகளாக மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.ஒரே பாரதம்,உன்னத பாரதம் என்பதை வெளிக்காட்டும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வருகிறது. மாநிலங்கள் என்பது தற்போதுதான் உருவாக்கப்பட்டது, அரசுகள் நடத்துவதற்காக மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் வரும் வரை மாநிலங்கள் என பிரிக்கப்படவில்லை,அவர்களின் தேவைக்கு ஏற்ப லாபத்திற்காக மாநிலங்களை ஆங்கிலேயர்கள் பிரித்தனர். மழை,குளிர்,வெப்பம் என அனைத்து விதமான சூழலும் இந்தியாவில் தான் ஒரே நேரத்தில் வேறு வேறு இடங்களில் இருக்கும். சுதந்திரத்திற்கு பின் வடக்கு, தெற்கு என இன்று நாம் பிரித்து பேசுகிறோம்.வளர்ச்சி அடைய அடைய மாநிலங்களுக்கு இடையே பிரிவினை அதிகரித்து வருகிறது.மொழி போராட்டம் நடைபெற்ற பின் மாநிலத்தில் பல நூற்றாண்டுகளாக வாழும் மக்கள் கூட மொழி சிறுபான்மையினர் ,புலம் பெயர்ந்தவர்கள் என கூறுகிறோம்.
10 மற்றும் 11 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாவோயிஸ்ட் தாக்குதல் காரணமாக 5 முதல் 6 ஆயிரம் நபர்கள் ஒரு ஆண்டுக்கு கொல்லப்பட்டு வந்தனர் தற்போது அவ்வாறு இல்லை. வேற்றுமையில் ஒற்றுமை என்பதில் இருந்து பாரதம் உருவாக்கப்படவில்லை, பாரதம் என்பது ஒற்றுமையில் இருந்தே உருவானது.பாரத நாட்டில் அவர்கள் என்றே நடைமுறை இல்லை அனைவரும் ஒன்று தான். காந்திக்கு பின் இந்த நாட்டை முழுமையாகபுரிந்துகொண்ட ஒரே நபர் பிரதமர் மோடிதான்.பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும் நேரத்தில்நாட்டில் 30% மேலான மக்கள் வறுமையில் வாழ்ந்தனர், 2 வேளை உணவு இல்லை, வீடுகள் இல்லை ,அறிவியல் ஆராய்ச்சி ரீதியாக பின்னால் இருந்தோம் ,ஒரு நாடாக மிகவும் பின்தங்கி இருந்தோம் தற்போது வடகிழக்கு மாநிலங்கள் அமைதியாக உள்ளது, மாவோயிஸ்ட் முழுமையாக முடக்கப்பட்டுள்ளனர்.25 கோடி மக்கள் பிரதமர் மோடி ஆட்சியில் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர், 6% குறைவாக மட்டுமே தற்போது வறுமை உள்ளது” என்றார்.