‘ஜனநாயகன்’ பட பேனர் விழுந்ததில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் படுகாயம்: விஜய் ரசிகர் மன்ற தலைவர் உள்பட 3 பேர் கைது..!
புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே உள்ள சோலை கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் தனசேகரன் (64). தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் கட்டுப்பாட்டாளராக (Controller) பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாஞ்சாலைப் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
ஆர்.கே.நகர் தபால்காரர் வீதி வழியாக அவர் வந்தபோது, அங்கு நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' படத்திற்காக ரசிகர்களால் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட டிஜிட்டல் பேனர் ஒன்று பலத்த காற்றினால் திடீரெனச் சரிந்து விழுந்தது. எதிர்பாராத விதமாக தனசேகரன் மீது பேனர் விழுந்ததில், அவர் நிலைதடுமாறி அருகிலிருந்த கழிவுநீர் வாய்க்காலில் தலைக்குப்புற விழுந்து படுகாயமடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு முதலில் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால், மேல் சிகிச்சைக்காகச் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தனசேகரனின் மகன் ராஜராஜன் அளித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அனுமதியின்றி பேனர் வைத்தல், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அஜாக்கிரதையாகச் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில், அருந்ததிபுரத்தைச் சேர்ந்த விஜய் ரசிகர் மன்றத் தலைவர் 'கில்லி' செல்வா என்கிற செல்வகணபதி (26), கார்த்திக் (24) மற்றும் அருண்ராஜ் (19) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள 8 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.