பிரபல மினரல் வாட்டர் நிறுவனத்திற்கு ரூ. 8,020 அபராதம் விதித்த கோர்ட்..!
திருச்சி மேலசிந்தாமணியைச் சேர்ந்த ரா. புவனேஸ்வரி என்பவர், கடந்த 20.02.2025 அன்று சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள எம். ராஜா என்பவரது கடையில் ரூ. 20 கொடுத்து ஆண்டவர் மினரல் வாட்டர் பாட்டிலை வாங்கியுள்ளார்.
குடிநீர் பாட்டிலை திறப்பதற்கு முன்பு தயாரிப்பு தேதியை சரி பார்த்தபோது அது காலாவதி ஆகி இருந்தது தெரியவந்தது. மேலும், குடிநீர் பாட்டில் உள்ளே பிளாஸ்டிக் கழிவுகளும், தூசி மற்றும் அழுக்கு கலந்து காணப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வியாபாரியிடம் கேட்டபோது ஆண்டவர் மினரல் வாட்டர் நிறுவனத்தின் விற்பனையாளர் ரஞ்சித்திடம் இருந்து தினந்தோறும் குடிநீர் பாட்டில்களை வாங்கி விற்பதாகவும், இதற்கு தான் பொறுப்பல்ல என்று ராஜா கூறினார். ரஞ்சித்திடம் கேட்டபோது தான் வெறும் விற்பனை பொறுப்பாளர் மட்டுமே என்றும், நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக ஆண்டவர் மினரல் வாட்டர் நிறுவனம் மீது திருச்சி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புவனேஸ்வரி முறையிட்டார். இந்த மினரல் வாட்டர் பொதுமக்கள் குடிப்பதற்கு உகந்தது அல்ல, பொது நலனுக்கு ஆபத்தானது என்றும், அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் வழக்கறிஞர் ஏ.சேகர் ஆஜராகி வாதாடினார்.
இதையடுத்து, நேர்மையற்ற வணிகம் மற்றும் சேவைக் குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நிவாரணம் கோரி, புவனேஸ்வரி சார்பில் வழக்கறிஞர் சேகர் ஆஜராகி, திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் 8.5.2025 அன்று மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை, நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தின் தலைவர் டி. சேகர் மற்றும் உறுப்பினர் ஜெ.எஸ். செந்தில்குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது.
விசாரணையின் முடிவில், கடைக்காரர், குடிநீர் பாட்டிலுக்கானத் தொகையான ரூ.20ஐ மனுதாரருக்கு வழங்க வேண்டும். மன உளைச்சலுக்கான இழப்பீடாக கடைக்காரரும் ஆண்டவர் மினரல்வாட்டர் நிறுவனமும் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ ரூ.3,000 வழங்க வேண்டும். வழக்கு செலவுத்தொகையாக ரூ.5,000 வழங்க வேண்டும். இந்த மொத்த தொகையையும் (ரூ.20, ரூ.3,000, ரூ.5,000) 45 நாட்களுக்குள் 9% வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் உத்தரவிட்டது