×

நிலக்கரி ஏல பட்டியலில் இருந்து தமிழ்நாட்டின் 3 பகுதிகள் நீக்கம்!!

 

நிலக்கரி ஏல பட்டியலில் இருந்து தமிழ்நாட்டின் 3 பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டில் தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய அரசு சார்பில் ஏலம் கோரப்பட்டது.  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும் , விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.  அதில் நாடு முழுவதும் ஏலம் விடப்பட்ட 101 வட்டாரங்களில் சேத்தியாத்தோப்பு கிழக்கு ,மைக்கல் பட்டி , வடசேரி ஆகிய மூன்று தொகுதிகள் தமிழகத்தில் அமைந்துள்ளன . இந்த விவகாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் பெறப்படவில்லை.  மாநில அரசுடன் கலந்தாலோசனை செய்யப்படவில்லை. இத்தகைய முக்கியமான விஷயத்தில் மாநிலங்களுடன் இந்த ஆலோசனையும் நடத்தாமல் மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக செயல்படுவது துரதிஷ்டவசமானது.

தமிழ்நாட்டில் மதிப்புமிக்க விவசாய நிலங்கள் இருப்பதாலும்,  தமிழ்நாடு மக்களின் உணவு பாதுகாப்பு பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாலும்,  தமிழ்நாட்டில் உள்ள மூன்று சுரங்க வட்டாரங்கள் வடசேரி , மைக்கேல் பட்டி , சேத்தியாந்தோப்பு கிழக்கு ஆகிய மூன்றையும் ஏலத்தில் 7வது /17வது தவணையில் இருந்து விலக்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் நிலக்கரி ஏல பட்டியலில் இருந்து தமிழ்நாட்டின் 3 பகுதிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.  மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ஏல பட்டியலில் நாடு முழுவதும் 101 இடங்கள் இடம் பெற்றிருந்தன.இந்த சூழலில் ஏப்.24ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட திருத்தப்பட்ட ஏல பட்டியலிலிருந்து 3 பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.