×

நடிகர் விவேக் பிறந்தநாள் ; நினைவுக்கூறும் ரசிகர்கள்!!

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1961ஆம் ஆண்டு நவம்பர் 19ம் நாளில் பிறந்தார் நடிகர் விவேக். விவேகானந்தன் என்ற இயற்பெயர் கொண்ட நடிகர் விவேக் ஊட்டி கான்வென்ட்டில் பள்ளிப் படிப்பையும், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.காம்., பட்டமும் பெற்றவர்.  சிறுவயதிலேயே முறைப்படி பரத நாட்டியம் பயின்ற இவர்,  பல மேடைகளில் நாட்டியம் ஆடியுள்ளார் . நடிகர் விவேக் மதுரை அஞ்சல் தந்தி அலுவலகத்தில் பணியாற்றிய போது மதுரையில் நடைபெற்ற பரதநாட்டிய போட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.  இதையடுத்து இதன் இறுதி போட்டி  சென்னையில் நடைபெற்றபோது பாலசந்தருக்கு அறிமுகமானார்.

இயக்குனர் கே.பாலச்சந்தரின் மூலம் தமிழ் திரையுலகிற்கு மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில் அறிமுகமானார் நடிகர் விவேக். இதையடுத்து புது புது அர்த்தங்கள், மின்னலே பெண்ணின் ,மனதை தொட்டு , நம்ம வீட்டு கல்யாணம்,  தூள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றார். குறிப்பாக புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இவர் பேசிய இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் என்ற வசனம் மிகவும் பிரபலமானது. 

 நடிகர் விவேக்கிற்கு பிலிம்பேர் விருதுகள், தமிழக அரசு விருது,  பத்மஸ்ரீ விருது உள்ளிட்டவை வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.  லஞ்சம், மக்கள்தொகை பெருக்கம் ,ஊழல்கள் ,மூடநம்பிக்கை உள்ளிட்டவற்றுக்கு எதிராக விவேக் பேசிய கருத்துக்களால் இவர் சின்னச் கலைவாணர் என்று அன்போடு அழைக்கப்பட்டார். அப்துல் கலாமை முன்மாதிரியாக எடுத்து கொண்டு செயல்பட்டு வந்த இவர் கோடிக்கணக்கில் மரங்களை நட்டு சமூக பணியாற்றியுள்ளார். 

இவர் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவரது இந்த மரணம் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் திரை உலக ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சூழலில் விவேக்கின் 60 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. விவேக் மறைந்தாலும் அவரது நினைவுகள் என்றும் நம்மை விட்டு மறையாது என்பதே நிதர்சனமான உண்மை..