×

ஆறாத வடுவின் 22-ஆம் ஆண்டு நினைவு! கும்பகோணம் தீ விபத்து நினைவாக இன்று மாலை 94 மோட்ச தீபங்கள்!

 

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 22 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, சம்பவம் நடைபெற்ற பள்ளி முன்பு வைத்திருந்த 94 குழந்தைகளின் புகைப்படங்களுக்கு குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள், அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

குழந்தைகளுக்கு பிடித்தமான பதார்த்தங்கள், திண்பண்டங்களை புகைப்படங்களுக்கு முன்பு வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீரோடு நினைவு கூர்ந்து அவர்கள் மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பேரணியாக பழைய பாலக்கரை பகுதியில் உள்ள நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். மேலும், இன்று மாலை மகாமக குளத்தில் 94 மோட்ச தீபங்கள் ஏற்றப்படவுள்ளன.

தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர் தமிழ்நாடு அரசிற்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். குறிப்பாக குழந்தைகளை பறி கொடுத்த குடும்பங்களில் அக்குழந்தைகளின் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என பலர் வேலைவாய்ப்பின்றி இருப்பதால், தமிழ்நாடு அரசு அவர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

தீ விபத்தில் 2 குழந்தைகளை இழந்த இன்பராஜ் கூறுகையில், “பள்ளியில் தீ விபத்து நிகழ்ந்து 22 ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் வந்து இங்கு அஞ்சலி செலுத்தி வருகிறோம். இந்த நாளை நினைவுக்கூர்ந்து, குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தினத்தை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும் என நீண்ட நாளாக கோரிக்கை வைத்து வருகிறோம். அரசு இதனை பரிசீலிக்க வேண்டும்.

அதே போன்று, ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தை உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு இருக்கிறோம். அதனையும் அரசு நிறைவேற வேண்டும்.

உயிரிழந்த 94 குழந்தைகளின் குடும்பத்தில் பலர் வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு வேலையை வழங்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.