×

அறுவை சிகிச்சையின்போது சிறுமி பலி... தனியார் மருத்துவமனையை கண்டித்து உறவினர்கள் போராட்டம்!

 

ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி உயிரிழந்ததை கண்டித்து, சிறுமியின் உடலுடன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள செம்மடைப்படி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் நந்தினி(14). இவரது இரு காதுகளிலும் கட்டி ஏற்பட்டுள்ளது. வலியால் அவதிப்பட்ட சிறுமி நந்தினியை ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துமனையில் பெற்றோர் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு நந்தினிக்கு நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை மூலம் காதில் இருந்த கட்டிகளை அகற்றி உள்ளனர். 

இதனை தொடர்ந்து, நந்தினிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், சிறுமி நந்தினியை சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செசன்ற நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடல் பிரேத பரிசோதனைக்கு பின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, நேற்று ஒட்டன்சத்திரம் மயானத்தில் அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. 

அப்போது, நந்தினியின் இறப்புக்கு காரணமான தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்ககோரி, அவரது உடலை தகனம் செய்ய உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி சோமசுந்தரம் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால், அதனை ஏற்க மறுத்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஒட்டன்சத்திரம் மயானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.