ஒப்பந்தப் பணிகளில் விதிமுறைகள் கட்டாயம்- பொதுப்பணித்துறை அதிரடி
ஒப்பந்தப்புள்ளி விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். விதிகளை மீறினால் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதிகளை கண்காணிப்பு, செயற்பொறியாளர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு பொதுப்பணித்துறை சார்பில் 16.09.2026 அன்று வெளியிடப்பட்ட அறிவுறுத்தலில், நிர்வாக ஒப்புதல், தொழில்நுட்ப ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு பெறாமல் எந்தப் பணியும் தொடங்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் முடிந்து தகுதியான ஒப்பந்ததாரருக்கு பணி ஆணை (Work Order) வழங்கிய பின்னரே பணிகளைத் தொடங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிகளைத் தனித்தனியாகப் பிரித்து ஒப்பந்தப்புள்ளி விதிகளைத் தவிர்ப்பதும், பின்னோக்கித் தேதியிட்டு பணி ஆணை வழங்குவதும் (Anti-Dating Orders) முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.இந்த விதிமுறைகளை மீறினால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுப்பணித்துறை எச்சரித்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.