×

திமுக ஆட்சியில் ரூ.4,000 கோடி மதிப்பிலான அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்பு- சேகர்பாபு

 

திமுக ஆட்சிப் ஏற்பட்ட பின்னர் தமிழக கோவில்களில் இருந்து சிலை கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “தமிழ்நாட்டில் கோவில்களுக்கு மாவட்ட அளவில், நியமிக்கப்பட வேண்டிய அறங்காவலர் குழுக்கள் மொத்தம் 38 வருவாய் மாவட்டங்களுக்கு தலைவர் மற்றும் நான்கு பெயர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். அந்த வகையில் இதுவரையிலும் 30 மாவட்டங்களுக்கு மாவட்ட அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அப்படி நியமிக்கப் பட்ட மாவட்ட அறங்காவலர் குழு அந்தந்த மாவட்டத்தில் இருக்கின்ற  40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருக்கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கின்ற பணியை தொடங்கியுள்ளது. இது தவிர 509 அறங்காவலர்கள் நியமிக்கின்ற பணியையும் தொடங்கியுள்ளது.

ஒரு ஆண்டு காலத்திற்குள் அறங்காவலர்கள் முழுமையாக நியமிக்கும் பணி முடிவடையும் தமிழக முதல்வரும் அறங்காவலர் குழுவை நியமிக்கும் பணியை விரைவுப்படுத்த உத்தரவிட்டுள்ளார். இந்த அரசு ஏற்பட்ட பிறகு சுமார் 430 திருக்கோவிலுக்கு கடந்த 20 மாத காலத்தில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. 2400 திருக்கோவிலுக்கு திருப்பணிகள் நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2500 கிராமப்புற மற்றும் ஆதி திராவிடர்கள் வசிக்கின்ற மக்கள் சார்ந்து இருக்கின்ற திருக்கோவிலுக்கு தலா 2  லட்சம் ரூபாய் என்ற அளவில் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நூறு ஆண்டுகள் பழமையான சுமார் 100 கோவில்களின் திருப்பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு கோவிலுக்கு தலா  15 லட்சம் ரூபாய் என்ற அளவில் 78 கோவில்களுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது.

22 கோவில்களுக்கு நிர்வாக அனுமதி வழங்குகின்ற பணிகள் நடைபெற்று வருகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வந்த கோவில்களுக்கு திருப்பணிகள் செய்வதற்காக தமிழக முதல்வர் இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். அதில் 58 கோடி ரூபாய்க்கு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 42 கோடி ரூபாய்க்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. வெகு விரைவில் அந்த 100  திருக்கோவில்களுக்கும் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு மேல் குடமுழுக்கு நடத்த வேண்டிய கோவில்களுக்கு குடமுழுக்குகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கான குடமுழுக்கு செய்வதற்கு ஏப்ரல் மாதம் கலச பூஜை பணியை மேற்கொள்ளவுள்ளோம். ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் செலவில் நேர்த்தியாக அந்த பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

ஏப்ரல் மாத இறுதிக்குள் திருக்கோவில் கூறிய பணி நிறைவு பெற்று கலசாபிஷேகம் நடைபெறும் ஆக்கிரமிப்பு புகார்கள் துறைக்கு தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரையிலும் 4000 கோடி ரூபாய் மதிப்பிலான அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு ஏற்கனவே கடத்தப்பட்ட சிலைகளை மீட்பது ஒரு புறம்  புதிதாக சிலைகள் களவு போகாமல்  தடுக்கின்ற பணி ஒருபுறம் என்று இரண்டையும் ஒன்று சேர பார்த்துக்  கொண்டிருக்கிறோம். திமுக ஆட்சி ஏற்பட்ட பின்னர் 282 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலை நாடுகளில் இருந்து 32 சிலைகள் இங்கிருந்து களவு போனவை அடையாளம் காட்டப்பட்டுள்ளன. அந்தச் சிலைகளை மீட்டுக் கொண்டு வருகின்ற பணியும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆட்சி வந்த பின்னர் சிலை கடத்தல் முழுவதுமாக தடுக்கப்பட்டுள்ளது” என்றார்.