ரூ.148.91 கோடி மதிப்பிலான 163.40 ஏக்கர் திருக்கோயில் நிலங்கள் மீட்பு- தவெக அரசு சாதனை
தவெக அரசு பொறுப்பேற்ற ஆறு மாதங்களில் ரூ.148.91 கோடி மதிப்பிலான 163.40 ஏக்கர் திருக்கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 17,707.10 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, மேற்படி புலங்களில் 13,233 எல்லைக் கற்கள் நடப்பட்டுள்ளன.
இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டப்பிரிவு 78-ன் கீழ், இணை ஆணையர் நீதிமன்றங்களில் 23,815 எண்ணிக்கையிலான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அவற்றில் 9,125 வழக்குகளில் இறுதி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.148.91 கோடி மதிப்பிலான 163.40 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு, திருக்கோயில்கள் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. திருக்கோயில்களுக்குச் சொந்தமான அசையாச் சொத்துகளிலிருந்து வரப்பெற வேண்டிய கேட்டு-வசூல் நிலுவைத் தொகையில் ரூ.213 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
திருக்கோயில்களுக்கு சொந்தமான 34.82 ஏக்கர் நிலங்களுக்கு 15 திருக்கோயில்களின் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு பெறப்பட்டுள்ளது. கணினிச் சிட்டாவில் தவறுகள் திருத்தம் செய்ய வருவாய் துறை கோட்டாட்சியரிடம் முறையீடுகள் செய்யப்பட்டு 262 ஏக்கர் நிலங்கள் 226 திருக்கோயில்களின் பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளன. திருக்கோயில்களுக்குச் சொந்தமான கடைகள் மற்றும் கட்டடங்களில் வாடகைக்கு இருப்போருக்கு, வாடகை மற்றும் நிலுவைத் தொகை குறித்த கோரிக்கை அறிவிப்புகள் உரிய கால இடைவெளியில் தவறாமல் வழங்கப்பட்டு வருகின்றன. வாடகைதாரர்கள் நிலுவைத் தொகையைச் செலுத்தியவுடன் உடனடியாக ரசீது வழங்குவதுடன், ஏற்கெனவே செலுத்தப்பட்ட தொகைகளைக் கணக்கில் கொண்டு, மீதமுள்ள நிலுவைத் தொகை குறித்த விவரங்கள் துல்லியமாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி, வாடகைதாரர்கள் தங்கள் செலுத்த வேண்டிய வாடகை மற்றும் நிலுவைத் தொகை குறித்த விவரங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகையில், குறிப்பிட்ட கால இடைவெளியில் கைபேசி குறுஞ்செய்திகள் வாயிலாகத் தகவல்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளைப் பாதுகாத்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றி திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறுதல் ஆகிய நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.