×

‘ரியல் ஹீரோ’..! ஓடும் ரயிலில் இருந்து விழப்போன இளம்பெண் - மின்னல் வேகத்தில் மீட்ட ஆர்.பி.எஃப் வீரர்!

 

அரியலூர் ரயில் நிலையம் வழியாகத் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பெரம்பலூர், தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்டங்களிலிருந்து பயணிப்பது வழக்கம். நேற்று அதிகாலை விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற 'மெமு' (MEMU) ரயில் காலை 7 மணியளவில் அரியலூர் நிலையத்திற்கு வந்தது.

ரயில் புறப்படத் தொடங்கிய அந்தப் பதற்றமான சூழலில், சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்றார். படிக்கட்டின் கைப்பிடியைப் பிடித்தபோது, எதிர்பாராதவிதமாக கால் சறுக்கி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையிலான மரணப் பள்ளத்தில் விழப் போனார்.

அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) வீரர் செந்தில், கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்து சென்று, அந்தப் பெண்ணைப் பிடித்து ரயிலுக்குள் தள்ளிப் பத்திரமாக ஏற்றிவிட்டார். ஒரு நொடி தாமதித்திருந்தாலும் அந்த இளம்பெண்ணின் உயிர் பறிபோயிருக்கும். அதிர்ஷ்டவசமாக வீரர் செந்திலின் சமயோசித புத்தியால் ஒரு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தொடரும் நேர்மை.. பாராட்டும் மக்கள்!

இந்த மீட்புச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் வீரர் செந்திலை ‘அரியலூரின் காப்பாளர்’ எனப் புகழ்ந்து வருகின்றனர்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இதே வீரர் செந்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பும் இதே போன்ற ஒரு இக்கட்டான சூழலில், ரயிலில் இருந்து விழப் போன மற்றொரு பெண்ணைக் காப்பாற்றியிருந்தார். தொடர்ச்சியாகத் தனது கடமையை வீரத்துடன் செய்து வரும் செந்திலை, ரயில்வே உயரதிகாரிகளும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.