கேஸ் சிலிண்டர் டூ பைப்லைன் காஸ்க்கு மாறத் தயாரா? மத்திய அரசு கொடுத்த 10% ஆஃபர்!
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா பேசியதாவது
உத்தரப் பிரதேசத்தில் 1,100 இடங்கள் சோதனைகள் நடத்தப்பட்டு 1,000 கள்ளச்சந்தை சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே நேரத்தில் மத்தியப் பிரதேசத்தில் 1,632 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு 250 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன,” என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், சமையல் எரிவாயு சிலிண்டர்களை சட்டவிரோதமாகப் பதுக்குவது மற்றும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது ஆகியவற்றுக்கு எதிராகக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி, 56 லட்சம் சிலிண்டர் முன்பதிவுகள் பெறப்பட்டுள்ளன. அதில், 55 லட்சம் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. சமையல் எரிவாயு விநியோகத்தின் அளவு அதே நிலையில் நீடிக்கிறது என பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனவே, விநியோகத்தை ஒழுங்குபடுத்த மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. உள்நாட்டு மக்களின் தேவைக்கே மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும் அமைச்சகம் செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.
நீண்டகால அடிப்படையில், இயற்கை எரிவாயு சிலிண்டரில் இருந்து குழாய் வழி இயற்கை எரிவாயுவிற்கு (PNG) மாற, மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் உதவ முன்வந்தால், அவற்றுக்குக் கூடுதலாக 10 விழுக்காடு வணிக ரீதியிலான சமையல் எரிவாயு சிலிண்டர் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் சுஜாதா சர்மா உத்தரவாதம் அளித்துள்ளார்.
மேலும், ‘சிலிண்டர் தட்டுப்பாடு’ எனும் பதற்றத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த முன்பதிவுகள் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் அனைவரும் காஸ் முகவர்களின் அலுவலகங்களில் வரிசை கட்டி நிற்காமல், ஆன்லைன் மூலமாக சிலிண்டரை முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், அதன் விநியோகம் தடங்கல் இல்லாமல் நடைபெறும் எனவும் சுஜாதா உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில், ஈராக்கின் பஸ்ரா நகருக்கு அருகே மார்ச் 12 அன்று நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, எண்ணெய் கப்பலான ‘எம்டி சேஃப்சீ விஷ்னு’-விலிருந்து மீட்கப்பட்ட 150 கப்பல் பணியாளர்கள் விரைவில் இந்தியா வந்தடைவார்கள் என்றும், அத்தாக்குதலில் உயிரிழந்த இந்தியரின் உடலைத் தாயகம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் விளக்கக் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் (வளைகுடா பிரிவு) அசெம் ஆர். மகாஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், வளைகுடா நாடுகளில் கடற்பரப்பில் உள்ள இந்திய பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் நோக்கில், 24 மணி நேர உதவி எண்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்காசியா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்பட்டு வருவதால், விமானச் சேவைகள் தொடர்ந்து மேம்பட்டு வருவதாகவும் மகாஜன் தெரிவித்தார்.