மீண்டும் சின்னசாமி ஸ்டேடியத்தில் RCB ஆட்டம்: ‘ஈ சாலா கப் நம்தே’ முழக்கத்துடன் அதிரப்போகும் பெங்களூரு!
ஆர்.சி.பி அணி மீண்டும் தனது சொந்த மண்ணான சின்னசாமி மைதானத்தில் விளையாடுவதற்கு கர்நாடக அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு பெங்களூரு அணி ஐ.பி.எல் கோப்பையை வென்றபோது, ரசிகர்கள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கடும் நெரிசல் மற்றும் துரதிர்ஷ்டவசமான சில உயிரிழப்புகள் காரணமாக இந்த மைதானம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மைதானம் திறக்கப்படுவது ஆர்.சி.பி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு விவகாரத்தில் எவ்வித சமரசமும் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக உள்ள அரசு, நடப்பு ஆண்டுக்கான போட்டிகளை நடத்தப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, மைதானத்தின் முழு கொள்ளளவை விடக் குறைவாக, அதாவது 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் பேர் வரை மட்டுமே அனுமதிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன், கூட்ட நெரிசலைக் கண்காணிக்கவும் தவிர்க்கவும் தேவையான பாதுகாப்பு நெறிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த இம்முறை அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. தொழில்நுட்பக் கண்காணிப்பு மூலம் கூட்டத்தைக் கையாளும் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஆர்.சி.பி வீரர்களின் அதிரடி ஆட்டத்தை மீண்டும் தங்களின் ஹோம் கிரவுண்டில் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், பெங்களூரு ரசிகர்கள் 'சின்னசாமி மைதானம் அதிரப்போகும்' தருணத்திற்காக ஆவலோடு காத்திருக்கின்றனர்.