“அதிமுகவை ஆட்டைய போட நினைத்தார், எடப்பாடியிடம் அவர் பருப்பு வேகல”- உதயகுமார் பரபரப்பு பேட்டி
அதிமுகவை அபகரிக்க முடியாததன் விரக்தியில் டிடிவி தினகரன் வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டிருக்கிறார், முதலமைச்சராக இருக்கும் போதே ஜெயலலிதா சிறைக்கு சென்ற பாவமெல்லாம் சும்மா விடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “ஜெயலலிதாவால் 10 ஆண்டு காலம் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கூட தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் தினகரன்.ஜெயலலிதா ஒருவரை தகுதி நீக்கம் செய்கிறார் என்றால், அது ஆண்டவனே செய்ததற்கு அர்த்தம்.இவர் இப்போது அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு பரப்புவதையே வேலையாக கொண்டிருக்கிறார். அதிமுக தொண்டர்கள் எல்லோரும் தலைவர் இல்லாத அனாதைகளாக இருப்பது போல அவர் பேசி கொண்டிருக்கிறார்.மனோஜ் பாண்டியன் சட்ட ஞானம் கொண்டவர். அவர் திமுகவுக்கு சென்றதற்கு கூட எடப்பாடி தான் காரணம் என வாய் கூசாமல் தினகரன் பொய் பேசுகிறார். தினகரன் உடன் இருந்த செந்தில் பாலாஜி, மாரியப்பன் கென்னடி, உசிலம்பட்டி மகேந்திரன் உள்ளிட்ட நபர்கள் எல்லாம் ஏன் அவரை விட்டு விலகி வெளியே வந்தார்கள்?செந்தில் பாலாஜியை ஏன் திமுகவுக்கு அனுப்பி வைத்தீர்கள்?உங்களை நம்பி வந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று அரசியல் அனாதைகளாக இருக்கிறார்கள்.தினகரன் அதிமுக கட்சியை ஆட்டைய போட நினைத்தார்,எடப்பாடியிடம் பருப்பு வேகவில்ல.அது நிகழாமல் போனதால் அந்த விரக்தியின் காரணமாக வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டிருக்கிறார். மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசிக் கொண்டிருக்கிறார் தினகரன்.அவர் இப்போது பொது வாழ்க்கையில் இப்படி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசிக் கொண்டிருப்பது எங்களுக்கு மிக வேதனையாக இருக்கிறது.
இயலாமையின் உச்சத்தில் இருக்கிற அண்ணன் தினகரன் அமமுகவை துவங்கும் போது எவ்வளவு பேர் உங்களுக்கு தோள் கொடுத்து நின்றார்கள். அவர்களில் எவ்வளவு பேரை சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக்கினீர்கள்? மக்கள் பிரச்சனைகள் சார்ந்து எதுவுமே செய்ததே இல்லை. ராணுவ கட்டுப்பாடோடு அதிமுகவை எடப்பாடி பழனிசாமி நடத்திக் கொண்டிருக்கிறார். இதை பொறுக்க முடியாமல் விசுவாசம், துரோகம் என பேசிக் கொண்டிருக்கிறார். "கொசுக்கடி தாங்க முடியவில்லை", "நானும் ரவுடி" தான் என்பது போல தினகரன் பரிதாபகரமான நிலைக்கு சென்று விட்டார். ஒரு காலத்தில் செல்வாக்கோடு இருந்தவர் தான். இன்று ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அவர் அனைத்தையும் இழந்து நிற்கிறார். முதலமைச்சராக இருக்கும் போதே ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு யார் காரணம்? ஆண்டவனுக்கே வெளிச்சம். அந்த பாவமெல்லாம் சும்மா விடாது. ஜெயாலிதாவை மருத்துவமனையில் வைத்து உரிய சிகிச்சை கொடுத்தீர்களா என ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன. ரகசிய ஆவணங்களை கிழித்து எறிந்து விட்டதாக சொல்வது சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது.
திமுகவை எதிர்க்கும் தவெக, தேமுதிக, பாமக கட்சிகள் அதிமுகவுடன் ஒன்றாக இணைய வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும். எல்லா கட்சி தலைவர்களையும் போல விஜயும் தன் தொண்டர்களை உற்சாக படுத்துவதற்காக திமுக - தவெக இடையே தான் போட்டி என்கிறார். விஜய்க்காக நாங்கள் சட்டமன்றத்தில் பேசியதற்காக அவர் எங்களுக்கு நன்றி சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. நாங்கள் நல்லதை செய்து கொண்டே இருப்போம்.நிச்சயமாக நாங்கள் மெகா கூட்டணி அமைப்போம்" என்றார்