×

“அண்ட புளுகு, ஆகாச புளுகு அப்பாவுக்கு மிஞ்சுன பிள்ளை! உதயநிதி பொய் பேசுகிறார்”- ஆர்.பி.உதயகுமார்

 

எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் அரியணையில் அமர்த்த சூழுரை ஏற்று தே.ஜ.கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரன் அவர்களை இருகரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறேன் என எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக விழா மேடை வரை அமைதி ஊர்வலமாக வந்து மொழிப்போர் தியாகிகள் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த பின் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து பேசிய எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயக்குமார், “எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் அரியணையில் அமர்த்த சூழுரை ஏற்று தே.ஜ.கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரன் அவர்களை இருகரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறேன்.  இன்று மூத்த தலைவர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார், அவர் நலம் பெற வேண்டுகிறேன். இன்பநிதி வரை இருப்பேன் என சொன்னார், சொல்லலாம் செய்ய முடியாதுல.. இப்போ போய் படுத்துவிட்டார்.இப்போது அப்பாவும் மகனும் சட்டசபையில் அமர்ந்திருக்கிறார்கள். இந்த ஐந்து ஆண்டுகளில் திமுக செய்த சாதனை இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு. ஒவ்வொருவர் மீதும் கடன் அவ்வளவு வாங்கி வைத்துள்ளார்கள்.


ஆட்சி அதிகாரம் மக்களுக்கு சேவை செய்வதற்காக, இப்போது இருக்கும் அரசு மக்களுக்கு சேவை செய்யவில்லை.மகனை துணை முதல்வராக்கி விட்டார்கள். திரைப்படத்தில் தான் பார்த்திருக்கிறோம், இப்போது நிஜத்திலேயே பார்க்கிறோம் எம்எல்ஏ ஆனார், அமைச்சர் ஆனார், துணை முதல்வர் ஆகிவிட்டார். அவர் சொல்கிறார் விளையாட்டு துறையில் நிறைய செய்துள்ளோம், மினி ஸ்டேடியம் அமைத்துள்ளோம் என சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் வாங்கிவிட்டு, எம்எல்ஏ நிதியில் வாங்கி கட்டிவிட்டு நாங்க தான் செய்தோம்னா அண்ட புளுகு, ஆகாச புளுகு அப்பாவுக்கு மிஞ்சுன பிள்ளை உதயநிதி பொய் பேசுகிறார்.... பணி நிரந்தரம், பணி மாறுதல் குறித்து சட்டசபையில் பேச அனுமதிக்கவில்லை. இன்று ஆண்டவனாக இருந்தாலும் ஆளுநராக இருந்தாலும் ஒன்று தான். ஆண்டவன் யாரென்றால் நீதியரசர், நீதியரசர் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற சொல்கிறார். தீபம் ஏற்ற முடியாது என்று சொல்வதோடு, சர்வாதிகாரத்தின் உச்சமாக தீர்ப்பு சொன்ன நீதிபதியைவே பதவி நீக்கம் செய்கிறோம் என்ற சர்வாதிகாரம்.


ஆளுநர் மூன்று ஆண்டுகளாக ஆளுநர் உரையை புறக்கணிக்கிறார். இந்த ஆண்டு சட்டபேரவையை விட்டு வெளியே சென்ற பின் அறிக்கையாக வெளியிட்டார். தொழில்துறையில் உயர்ந்துவிட்டது என்ற பச்சை பொய்,  அதை தான் ஆளுநர் சொன்னார். இந்த ஆண்டு பிறந்து 25 நாட்களில் 85 கொலை நடந்துள்ளது. 46 பாலியல் வன்கொடுமை அதை சுட்டி காட்டியுள்ளார். ஆளுநர் உரையில் உண்மை நிலையை சொல்ல வேண்டாமா? தமிழ்நாடு அரசு வரலாற்றில் உண்மை நிலையை சொல்லாத காரணத்தினால் 3 ஆண்டுகளாக ஆளுநர் உரை புறக்கணிக்கப்பட்டுள்ளது. என்னால் முடிந்ததை செய்திருக்கிறேன், அடுத்து 2.O என சொல்கிறார். 1.O வையே தாங்க முடியவில்லை, மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். விலை வாசி உயர்ந்து விட்டது. போதை பொருட் நடமாட்டம் வீட்டுக்கே டோர் டெலிவரி செய்வார்கள் போல அந்த அளவு உயர்ந்துவிட்டது. இதற்காக தான் மதுராந்தகம் கூட்டத்தில் மக்களாட்சிக்கு மகுடம் சூட்டுவோம், குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்” என்றார்.