“விஜய் முதலில் பரீட்சை எழுதட்டும்” - ஆர்.பி. உதயகுமார்
அதிமுகவுக்கு மாற்று திமுக, இதுதான் காலம் காலமாக உள்ள தீர்ப்பு என தவெக தலைவர் விஜய்க்கு ஆர்.பி.உதயகுமாருக்கு பதில் அளித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “திமுகவை வீழ்த்தும் வலிமை அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது. அதிமுகவுக்கு மாற்று திமுக, இதுதான் காலம் காலமாக உள்ள தீர்ப்பு, திமுகவுக்கு என்றுமே மாற்று அதிமுகதான். அதிமுக, திமுக வரலாறுகளை விஜய் படிக்க வேண்டும். புதிதாக வந்தவர்கள் பரீட்சை எழுதாமல் தேர்ச்சி பெறுவேன் என்று சொல்வது அவர்களின் நம்பிக்கை. இப்போதுதான் விஜய் படித்து கொண்டிருக்கிறார். விஜய் முதலில் பரீட்சை எழுதட்டும். மதிப்பெண் பெற்ற பிறகு பேசலாம். தவெகவுக்கும் திமுகவும் இடையேதான் போட்டி என விஜய் கூறுவதை பொருட்படுத்த வேண்டாம்.
ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்காக திமுக 525 வாக்குறுதிகளை அளித்தது, நிறைவேற்ற முடியாத மக்களின் ஆசையை தூண்டும் விதமாக திமுக வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது, தமிழகத்தின் உண்மையான நிலவரத்தை திமுக அரசு மறைத்து வருகிறது, பங்காளி சண்டை, பகையாளி தடுப்பதற்காகத்தான் திமுக உள்ளதா?, மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்திற்கு ஒரு சல்லி காசை கூட திமுக பெற்றுத் தரவில்லை, மத்திய அரசின் இணைந்து திமுக தமிழகத்திற்கு எந்த ஒரு திட்டங்களையும் கொண்டு வரவில்லை. அனுபவம் வலிமை கொள்கைத் தெளிவோடு 75 வது ஆண்டை கொண்டாடும் திமுக மத்திய அரசுடன் இணைந்து திட்டங்களை செய்ய முடியவில்லை.” என்றார்.