“குனிந்து குனிந்து கும்பிடு போட்டு ஏமாற்றக்கூடியவர் ஓபிஎஸ்! ஜெ.விடம் பணத்தை கொள்ளையடித்தவர்”- ஆர்.பி.உதயகுமார்
ஓ .பன்னீர்செல்வம் குனிந்து குனிந்து கும்பிடு போட்டு ஏமாற்றக்கூடியவர்.மறைந்த ஜெயலலிதாவிடமும் இவ்வாறு நடந்து கொண்டார் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில் உள்ள மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில், தொகுதியின் எம்எல்ஏவும், முன்னாள் அதிமுக அமைச்சருமான ஆர். பி. உதயகுமார் தலைமையில் பாக முகவர்கள் கூட்டம் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஆர் .பி. உதயகுமார், திமுகவில் இணைந்துள்ள ஓ. பன்னீர்செல்வம் இங்குள்ள அதிமுகவினரை விலை பேசி வாங்க முயற்சித்தார், அது நடக்காது, நீங்களே ஒரு கட்சியின் முதலமைச்சர் ஆக இருந்துவிட்டு , மற்றொரு கட்சிக்குபோய் உங்களுடைய கதி என்னவென்று தெரியாத நிலையில் , நீங்கள் இங்குள்ள எங்கள் கட்சியினரை நீங்கள் விலை பேசி அழைப்பது எப்படி நடக்கும்? நீங்கள் உங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி தெரியாத நிலையில், மற்றவர்களை நீங்கள் அழைப்பது முறையா? என பன்னீர்செல்வத்தை மறைமுகமாக சாடினார்.ஓ பன்னீர்செல்வம் மறைந்த ஜெயலலிதாவிடம் குனிந்து கும்பிடு போட்டுக்கொண்டு ஏமாற்றியவர். அதேபோன்று நேற்று மதுரை வந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இடமும் குனிந்து கும்பிடு போட்டு , தனது மரியாதையை செலுத்தினார். அவர் கும்பிடு போட்டாலே ஏமாற்றுவதற்கு தான்.மதுரை வந்த ஸ்டாலினை மறைந்த ஜெயலலிதாவுக்கு நிகராக ஒப்பிட்டு பேசிய துரோகி ஓ. பன்னீர் செல்வத்தை மன்னிக்க முடியாது எனவும் ஆர்பி உதயகுமார் பேசினார்.
அம்மா அம்மா என்று ஜெயலலிதாவிடம் கொள்ளையடித்த பணத்தை எல்லாம் வைத்துக் கொண்டு, எதிரியிடம் சென்று ஓ. பன்னீர்செல்வம் தஞ்சமடைந்துள்ளார். இந்த பாவத்தை எத்தனை காசியில் சென்று தீர்த்தாலும் பாவம் தீராது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு பூத் கமிட்டி உறுப்பினர்களும், தங்களது ஒதுக்கப்பட்ட பகுதிகளில் 100 வாக்குகள் அதிகமாக பெற்று தந்தால் அந்த பூ கமிட்டி உறுப்பினருக்கு ரூபாய் ஒரு லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை தனது ட்ரஸ்டின் மூலம் கடன் உதவியாக வழங்கப்படும் எனவும் இக்கூட்டத்தில் அறிவித்தார்.