×

பாஜக மீட்டிங்க்கு செல்லாத புதுச்சேரி முதல்வர்- விஜய்யுடன் N.R.காங். கூட்டணி?

 

புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியில், பாஜக என். ஆர்.  காங்கிரஸ் தொகுதி பங்கீடு ஆலோசனைக் கூட்டம் நேற்று நள்ளிரவு நடைபெற்றது.‌ ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முதல்வர் ரங்கசாமி பங்கேற்காமல் புறங்கணிப்பால் பரபரப்பு ஏற்பட்டது.‌ இதனால் என் ஆர் காங்கிரஸ்,  பாஜகவினர் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணி நீடிக்குமா? என குழப்பம் ஏற்பட்டது. 

இரவு நடைபெற்ற கூட்டம் தோல்வியில் முடிந்ததால், இன்று இரண்டாம் கட்ட தொகுதி பங்கீடு கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெறுவதாக இருந்தது. ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பாஜக மாநில தலைவர் ராமலிங்கம், சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் முதல்வர் ரங்கசாமிக்காக காத்து இருந்தனர். தங்களது கோரிக்கைக்கு எந்தவித பதில் தெரிவிக்காததால் கூட்டத்தில் பங்கேற்காமல் என் ஆர் காங்கிரஸ் புறக்கணித்தது.


பேச்சுவார்த்தைக்காக இரண்டு மணி நேரம் காத்திருந்த ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் பாஜகவினர் ஏமாற்றம் அடைந்தனர். இறுகிய முகத்துடன் டெல்லி புறப்பட்ட மன்சுக் மாண்டவியாவிடம் கேட்ட போது, தன்யவாத் என்று இந்தியில் பேசிவிட்டு சென்றார். இதைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் ராமலிங்கிடம் கேட்டபோது, தொகுதி பங்கீடு முடிவாகவில்லை. நாங்கள் டெல்லிக்கு செல்கிறோம். பின்னர் இதுகுறித்து அறிவிக்கப்படும் என்று சோகத்துடன் தெரிவித்தார். கூட்டத்துக்காக காத்திருந்த அமைச்சர் நமச்சிவாயம், என் ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் வராததால் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே ஹோட்டல் இருந்து வெளியேறினார். மன்சுக் மாண்டவியாவுடன் பாஜக மாநில தலைவர் ராமலிங்கம், சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றனர்.