×

20 குழந்தைகள் இறப்புக்கு காரணமான ரங்கநாதன் ம.பி. நீதிமன்றத்தில் ஆஜர்

 

மத்திய பிரதேச மாநிலம் சிந்துவாரா மாவட்டம் பராசியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ‘கோல்ட் ரிப் (Cold Rif)’ என்ற இருமல் மருந்து குடித்த குழந்தைகள் 20 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மத்தியப்பிரதேச போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ம.பி போலீசார் விசாரணையில் குறிப்பாக, மை, ரெசின், டை போன்றவை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் டை-எத்திலீன்- கிளைகால் எனும் நச்சுத்தன்மையுள்ள ரசாயனப் பொருள், இருமல் மருந்தில் அதிகமாக கலக்கப்பட்டுள்ளதும், அதனால் குழந்தைகளிடையே சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தியதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட் ரிஃப் இருமல் மருந்து கடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மருந்தை தயாரித்த நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக மருந்து கடையின் உரிமையாளர் சென்னை கோடம்பாக்கத்தில் இருப்பதாக மத்தியப் பிரதேச போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மத்தியப்பிரதேச போலீசார் சென்னைக்கு விரைந்து வந்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை மத்தியப் பிரதேச போலீசார், சென்னை அசோக் நகர் போலீசார் உதவியுடன் ஶ்ரீசென் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை (70)  கோடம்பாக்கம், நாகர்ஜுனா 2 வது தெருவில் வசித்து வந்த அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரங்க நாதனை விசாரணைக்காக காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வந்த ஶ்ரீசென் பார்மா நிறுவனத்திற்கு அழைத்து சென்று விசாரணை மற்றும் ஆய்வில் ஈடுப்பட்டனர். பின்னர், கைது செய்யப்பட்ட கைது செய்யப்பட்டுள்ள இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை  சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிமன்றம் டிரான்சிட் வாரண்ட் பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து மத்தியபிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்ட ரங்கநாதனை மத்தியபிரதேசத்திற்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து இருமல் மருந்து  நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் மத்திய பிரதேச நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.