×

மன உளைச்சலில் டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள்… விரைந்து கலந்தாய்வு நடத்த ராமதாஸ் கோரிக்கை!

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 3 வகையான அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கைகள் கடந்த ஒரு மாதத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரசுப் பணிக்கு ஆள் தேர்வு தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதே நேரத்தில், சில பணிகளுக்கு நடத்தப்பட வேண்டிய கலந்தாய்வு ஓராண்டுக்கும் மேலாக நடத்தப்படாதது வருத்தமளிக்கிறது. தமிழக அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அதிகாரிகள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர் உள்ளிட்ட 7 வகையான பணிகளுக்கு 6,417 பேரைத்
 

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 3 வகையான அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கைகள் கடந்த ஒரு மாதத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரசுப் பணிக்கு ஆள் தேர்வு தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதே நேரத்தில், சில பணிகளுக்கு நடத்தப்பட வேண்டிய கலந்தாய்வு ஓராண்டுக்கும் மேலாக நடத்தப்படாதது வருத்தமளிக்கிறது.

தமிழக அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அதிகாரிகள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர் உள்ளிட்ட 7 வகையான பணிகளுக்கு 6,417 பேரைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை 2019 ஜூன் 14 டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அந்தப் பணிகளுக்கு அதே ஆண்டு செப்.1 எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, நவம்பர் 12 முடிவுகள் வெளியிடப்பட்டன. பின் பணியிடங்களின் எண்ணிக்கை 9,882ஆக அதிகரிக்கப்பட்டது. இப்பணிகளுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் 17 வரை கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில், மொத்தமுள்ள 6,007 பணியிடங்களில் 5,798 இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் 209 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் மட்டும் நிரப்பப்படவில்லை.

அதேபோல், கடந்த நவம்பர் 2 முதல் டிசம்பர் 9 வரை நடத்தப்பட்ட தட்டச்சர் பணிக்கான கலந்தாய்வில் மொத்தம் 221 இடங்கள் நிரப்பப்படவில்லை. இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் என, காலியாக உள்ள 430 பணியிடங்களும் பொதுப்போட்டிப் பிரிவினரைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும். இந்தப் பணியிடங்களை நடப்பாண்டின் தொடக்கத்திலேயே டிஎன்பிஎஸ்சி நிரப்பியிருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்யாததால், அதன்பின் கொரோனா 2வது அலை, தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் அந்தப் பணிகளுக்கான கலந்தாய்வை நடத்த முடியவில்லை. கொரோனா கட்டுக்குள் வந்த போதிலும் இன்று வரை கலந்தாய்வுக்கான அறிவிப்பு வெளியாகவில்லை.

அவர்களுடன் ஒன்றாகத் தேர்வு எழுதியவர்கள், அரசுப் பணியில் சேருவதற்கான தகுதிகளைக் கொண்டிருந்தும், தங்களுக்கு வேலை கிடைக்குமா… கிடைக்காதா? எனக் காத்திருப்பது கொடுமையான மன உளைச்சலைத் தரும். அதுமட்டுமின்றி, இரண்டாம் கட்டக் கலந்தாய்வு மூலம் பணியில் சேர இருப்பவர்கள் ஓராண்டுக்கும் கூடுதலான ஊதியம், பணிமூப்பு உள்ளிட்ட மற்ற உரிமைகளையும் இழப்பார்கள். இந்த இழப்புகளை எந்த வகையிலும் ஈடுசெய்ய முடியாது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்தத் தனியார் வேலைக்கும் செல்ல முடியவில்லை.

எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய நான்காம் தொகுதித் தேர்வுகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வுகளை தேர்வாணையம் உடனடியாக நடத்த வேண்டும். அதுமட்டுமின்றி, முதல் கட்டக் கலந்தாய்வில் பங்கேற்று அரசு வேலை பெற்றவர்களுக்கு இணையான பணி மூப்பும், ஊதிய விகிதமும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.