×

இராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையினரால் கைது - ராமதாஸ் கண்டனம்!

 

இராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 23 பேரை கச்சத்தீவு அருகே  சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். அவர்களின் இரு மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  கச்சத்தீவையொட்டிய இந்திய கடல் எல்லையில்  அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களக் கடற்படையினர் அத்துமீறி நுழைந்து கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

கடந்த மாதத்தில் மட்டும் நாற்பதுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது.  அவர்களில் பலர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டு விட்ட நிலையில் 18 மீனவர்கள் மூன்று நாட்களுக்கு முன்னர் தான் விடுதலை செய்யப்பட்டனர். அதற்குள்ளாகவே  மேலும்  23 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.  தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை பறிக்க வேண்டும் என்பதற்காகவே  அவர்களை சிங்களப்படை  தொடர்ந்து கைது செய்து வருகிறது. இதற்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும்.