×

“எம்பியாக எனது பயணத்தை தொடங்கினேன்... ஸ்டாலின், உதயநிதிக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்”- கமல்ஹாசன்

 

இந்திய நாடாளுமன்றத்தில் இன்று தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு மாநிலங்களவை உறுப்பினராக எனது பயணத்தைத் தொடங்கினேன் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில், “‘இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன்' என்றும், 'இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாகப் பற்றி நிற்பேன்' என்றும் இந்திய நாடாளுமன்றத்தில் இன்று தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு மாநிலங்களவை உறுப்பினராக எனது பயணத்தைத் தொடங்கினேன்.


இந்தத் தருணத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், அன்பிற்கினிய நண்பர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர், பிரியத்துக்குரிய இளவல் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களுக்கும், மக்கள் நீதி மய்யம் உறவுகளுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் என் ஆருயிர் நண்பர் திரு. ஸ்டாலின் அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்பவிருக்கிறார் எனும் செய்தி பெருமகிழ்ச்சியைத் தருகிறது. அவருக்கு நல்ல உடல் நலமும், மகத்தான வெற்றிகளும் என்றென்றும் தொடர இந்நாளில் அவரை உளமார வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.