×

கோவையில் ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!

 

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகுவதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோரை டெல்லியில் நேரில் சந்தித்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கவுள்ளதாகவும், இன்று ஜூன் 4-ம் தேதி அவரின் பிறந்தநாள் அன்று இதற்கான அறிவிப்பை அவர் வெளியிடலாம என்றும் எதி்ர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கோவை மாநகரில் உக்கடம் கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில், கோவை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக அண்ணாமலைக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், "நீ இல்லாமல் எவர்க்கும் அரசியலும் இல்லை, அரியணையும் இல்லை. தலைவா ஆணையிடு! அண்ணாமலை மகுடம் சூட..” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், அண்ணாமலைக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும்படியான புகைப்படங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.

அரசியல் களத்தில் இல்லையென்றாலும், நடிகர் ரஜினிகாந்தின் கருத்தும், ஆதரவும் அரசியல் களத்தில் கவனம் பெற்று வருகிறது. இந்நிலையில், கோவையில் அவரின் ரசிகர் மன்றத்தினர், அண்ணாமலைக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியிருப்பது தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதேசமயம், முன்னாள் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி சார்பாக, அண்ணாமலையின் பிறந்தநாள் தேதியை குறிப்பிட்டு "தலைவா! தரணி ஆள வா..!" என்று குறிப்பிடப்பட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ஜிடி மேம்பாலம் அருகே பெரிய அளவிலான பேனரும் வைக்கப்பட்டுள்ளது.