ரஜினி எனும் சகாப்தம் : மறக்க முடியாத கூட்டணி முதல் இமயமலைப் பழக்கம் வரை: பிறந்தநாள் ஸ்பெஷல்..!
இந்திய சினிமா வரலாற்றில் சூப்பர் ஸ்டாராகத் திகழும் நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாள் இன்று உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. தமிழ் திரையுலகைத் தாண்டி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, வங்காளம், ஏன் ஆங்கிலம் எனப் பல மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இவரைப் போலவே பல கோடி ரசிகர்களைக் கொண்ட, இவரின் போட்டியாளராகக் கருதப்படும் கமல்ஹாசனுடன் இவர் இணைந்து மொத்தம் 12 படங்களில் நடித்துள்ளார். 'நினைத்தாலே இனிக்கும்' படத்திற்குப் பிறகு இந்த நட்சத்திரக் கூட்டணி மீண்டும் இணையவில்லை. நடிகைகள் ஸ்ரீபிரியா மற்றும் ஸ்ரீதேவியுடன் அதிக படங்களில் இணைந்து நடித்த இவர், முதன்முதலில் ஃபிலிம்ஃபேர் விருதை 'நல்லவனுக்கு நல்லவன்' திரைப்படத்திற்காகப் பெற்றார்.
1977 முதல் 1991 வரையில் ஆண்டுதோறும் அதிகப் படங்களில் நடித்த சாதனை ரஜினியையே சேரும். குறிப்பாக, 1978 ஆம் ஆண்டில் மட்டும் இவர் 21 படங்களில் நடித்து இந்திய சினிமாவை வியக்க வைத்தார். கறுப்பு வெள்ளை காலப் படங்கள் முதல், வண்ணப் படங்கள், அனிமேஷன் திரைப்படங்கள், அத்துடன் 3D தொழில்நுட்பத்தில் உருவான படங்கள் வரை, இந்திய சினிமாவில் அறிமுகமான அத்தனை தொழில்நுட்பங்களிலும் நடித்திருக்கும் ஒரே நடிகர் என்ற பெருமை ரஜினிகாந்துக்கு மட்டுமே உண்டு.
திரை வாழ்வில் எவ்வளவு பரபரப்பு இருந்தாலும், ஒவ்வொரு படம் முடிந்த பிறகும் இமய மலைக்குச் செல்வதை ஆன்மீக வழக்கமாக இவர் கொண்டுள்ளார். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டதோடு மட்டுமல்லாமல், அறிவியல் மற்றும் அரசியல் குறித்த புத்தகங்களையும் அதிகம் படிக்கும் பழக்கம் கொண்டவர் ரஜினிகாந்த். இத்தனைப் பெருமைகளையும் தன்னடக்கத்தையும் கொண்ட இந்த சூப்பர் ஸ்டார் இன்னும் பல வருடங்கள் தமிழ் சினிமாவை ஆள வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.