“ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கேட்க வேண்டும்... இல்லையெனில்”- ரஜினி ரசிகர்கள் எச்சரிக்கை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினியை மனவலிமை இல்லாதவர் என கூறிய ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் திருச்செங்கோடு உள்ளிட்ட தமிழக முழுவதும் உள்ள தொகுதிகளில் த.வெ.க.வுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் களம் இறங்குவார்கள் என எச்சரிக்கை செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ரஜினி குறித்து மன வலிமை இல்லாதவர், ஆகையால் தான் திமுக மிரட்டலால் அவர் கட்சி ஆரம்பிக்காமல் சென்று விட்டார் என தெரிவித்திருந்தார். இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்காக ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி வந்தனர்.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதி நகர ஒன்றிய ரஜினி ரசிகர்கள் திருச்செங்கோடு நகர் முழுவதும் ஆங்காங்கே கண்டன பதாகைகளை வைத்திருந்தனர். இது குறித்து ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவர் ஐயப்பன் செய்தியாளர்களிடம் கூறும்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஆதார் அர்ஜுனா ரஜினி குறித்து பேசி இருந்தார். இதற்கு நாங்கள் கண்டனம் தெரிவித்து இருந்தோம், மேலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தோம், அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்காவிட்டால் வரும் சட்டமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு தொகுதிகளில் ரஜினி ரசிகர்கள் 5000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் உள்ளனர். அவரது குடும்பங்கள் ரஜினி ரசிகர்கள் என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக களம் இறங்குவார்கள் என கூறினார். இந்த பேனர் காரணமாக திருச்செங்கோடு நகர பகுதிகளில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.