×

"குணமடைய வாழ்த்துகள்" - "நண்பர்" கமலிடம் போனில் நலம் விசாரித்த ரஜினி!

 

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ‘House of Khaddar’ என்ற பெயரில் பிரத்யேக ஆடை பிராண்டை உருவாக்கியுள்ளார்.  இந்தியாவின் காதி ஆடைகளைப் பல்வேறு உலக நாடுகளில் பிரபலமடைய செய்யும் நோக்கில் பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்தி வருகிறார். அதன் முதல் முயற்சியாக அமெரிக்கா சென்ற கமல்ஹாசன் சிகாகோ நகரில் இதுதொடர்பாக நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டார்.

 

அவர் அமெரிக்கா சென்ற விவரமே, அங்கு சென்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் மூலமே தெரியவந்தது. இந்த நிகழ்ச்சி குறித்து கூட சனிக்கிழமை ஒளிப்பரப்பட்ட பிக்பாஸில் கமல் கூறியிருந்தார். அப்போது, "அது வெளியூர். இது தான் என்னுடைய வீடு. வீட்டிற்கு திரும்பி வந்து தானே ஆக வேண்டும். நான் இதுவரை எனது பணியில் சரியாக இருந்துள்ளேன். ஒரு போதும் கடமை தவறியதில்லை. இனியும் கடமை தவற மாட்டேன்” என பேசியிருந்தார். 

ஆனால் நேற்று திடீரென அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்ததாகவும் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானதாகவும் ட்விட்டரில் கூறியிருந்தார். தற்போது மருத்துவமனையில் இருப்பதால் அவர் குணமடைய பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இச்சூழலில் கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து நடிகரும் அவர் நண்பருமான ரஜினிகாந்த் கமலிடம் போனில் நலம் விசாரித்துள்ளார். விரைவில் குணமடைந்து கமல் வீடு திரும்பவும் ரஜினிகாந்த் அவரிடம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.