கூட்டணி ஆட்சி என யார் சொன்னது?- ராஜேந்திர பாலாஜி ஆவேசம்
பிரபாகரனுக்கு நிகரான வீரம் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
சிவகாசியில் நடைபெற்ற கட்சி் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, “எடப்பாடி பழனிசாமி இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது. மதவாதம் துளிர்விட்டால் அங்கு எடப்பாடி பழனிசாமி இருக்க மாட்டார். பிரபாகரனுக்கு நிகரான வீரம் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி. 2026ல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் ஆட்சி. கூட்டணி ஆட்சி என யார் சொன்னது?, ஈபிஎஸ் தலைமையில் தான் ஆட்சி நடக்கும். திமுக ஆட்சியில் என் மீது வழக்குகள் போடப்பட்டன. அதற்கு பயந்து நான் ஓடவில்லை. அதிமுக ஆட்சி திட்டங்கள், திமுக ஆட்சியில் வந்த திட்டங்கள், திமுக ஆட்சியில் வந்த திட்டங்கள் குறித்து நேரடி விவாதத்திற்கு தயார். ஒன்றுமில்லாத பானையை உருட்டினால் வெள்ளி சொம்பாக மாறாது.
பெருவாரியான சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட அதிமுக தலைமையில் ஆட்சி அமையும். அதிமுகவை எதிர்க்க திமுகவிற்கு தைரியமும், துணிச்சலும் கிடையாது. அதிமுகவிற்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே கிடையாது. அதிமுக ஒரு அற்புதமான அணையாத விளக்கு” என்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என மதுரையில் பேசியிருந்த நிலையில், கூட்டணி ஆட்சி கிடையாது என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.