×

ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருக்க உதவியவர்கள் ஜாமீனில் விடுவிப்பு

 

ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருக்க உதவியதாக கைது செய்யப்பட்ட கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக நிர்வாகி ராமகிருஷ்ணன், மற்றும் அவரது உறவினர் நாகேஷ் , பாண்டியராஜன் மற்றும் ரவி கணேஷ் ஆகியோரை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த போது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி  3 கோடி ருபாய்க்கும் மேல் பண மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி பல மீது வழக்குகள் பதியப்பட்டன. இதனையடுத்து முன்ஜாமின் கேட்டு  உயர் நீதிமன்றத்தில்  ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து அவர் தலைமறைவானார்.  8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்ட நிலையில் 20 நாட்களாக பிறகு நேற்று மதியம் கர்நாடகா ஹாசன் பகுதியில்  காரில் தப்பி ஒட முயன்ற ராஜேந்திர பாலாஜியை தனிப்படையினர் கைது செய்தனர். அவர் தலைமறைவாக இருக்க உதவியதாக பாஜக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக நிர்வாகி ராமகிருஷ்ணன், மற்றும் அவரது உறவினர் நாகேஷ் மற்றும் சிவகாசி திருத்தங்கல்லை சேர்ந்த பாண்டியராஜன் மற்றும் ரவி கணேஷ் ஆகியோரை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இன்று (6-1-22) பிற்பகல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தயாராகினர்.
இதற்காக இந்த 4 பேருக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் உடல்நல பரிசோதனை செய்யப்பட்டது.பின்னர் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த புறப்பட்டனர்.
இந்த தகவல் அறிந்த இவர்களின் வழக்கறிஞர்கள் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு வந்தனர். ஆதலால் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் செல்லாமல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அவர்களை அழைத்து வந்தனர்.

ராஜேந்திர பாலாஜி தப்பிப்பதற்கு உடந்தையாகவும் துணையாகவும்  இருந்ததாக இந்த நால்வரின் மேல் IBC 212 ன் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்நிலைய ஜாமீனில் விடக்கூடிய பிரிவு என்பதால் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் உத்தரவின் பேரில் காவல்நிலைய  ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.