×

வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி- ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் கோரி மனு

 

வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி 30 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் விருதுநகர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்திருந்தார். அதனடிப்படையில் ரவிச்சந்திரன் சகோதரர் விஜய நல்ல தம்பியை விசாரித்ததில் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி காவல் கண்காணிப்பாளர் முன்பாக ஆஜராகி பணத்தை திரும்ப வழங்கி வருவதாக உறுதி அளித்திருந்தார். இந்நிலையில்  முன்னாள் அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி  பலருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் 3 கோடி வரை வாங்கி  ஏமாற்றிவிட்டதாக, விஜயநல்லதம்பி, புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி கே.டி.ராஜேந்திர பாலாஜி மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், "பணத்தை இழந்தவர்கள் விஜயநல்லதம்பியிடமே பணத்தை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால் விஜய நல்லதம்பியிடம் எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்தவர் மீது 8 க்கும் மேற்பட்ட குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகவே, இந்த வழக்கில் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.