×

ராஜராஜ சோழனின் வாக்குறுதி... ராஜேந்திர சோழனின் செப்பேடு: மீண்டும் தாயகம் திரும்புகிறது நெதர்லாந்து சென்ற தமிழ் ஆவணம்..!

 

பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரசு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதில் ஒருபகுதியாக ஐக்கிய அரசு அமீரகத்திற்கு சென்ற நிலையில், இரண்டாவது நாடாக மே 17ஆம் தேதி நெதர்லாந்திற்கு பயணம் மேற்கொண்டார்.

நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் நெதர்லாந்து நாட்டு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், கர்பா, குச்சிப்புடி, பரதநாட்டியம், மோகினியாட்டம், கதக் போன்ற நடனங்கள் கொண்ட வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தொடர்ந்து, தி ஹோக் நகரத்தில் இந்திய வம்சாவளியினர் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மோடி, அவர்கள் மத்தியில் உரையாற்றினார். இந்நிலையில், நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் மற்றும் இந்திய பிரதமர் மோடி இடையே இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்ததை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், இந்தியாவிற்கு சொந்தமான 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகளை பாதுகாத்து வைத்திருந்த நெதர்லாந்தின் லெய்டன் பல்கலைக்கழகம், அதனை இந்தியாவிற்கு திரும்ப தருவதாக தெரிவித்துள்ளது.

அதாவது, சோழர் கால செப்பேடுகள் 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் அடங்கிய இந்த தொகுப்பு, இந்தியாவின் 11-ம் நூற்றாண்டு சோழர் மன்னர்களின் வரலாற்றையும், கலாச்சாரத்தையும் பிரபலிக்கும் முக்கிய ஆவணமாக விளங்குகிறது.

தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட இந்த செப்பேடுகள், 19-ம் நூற்றாண்டில் டச்சு அதிகாரிகளின் மூலம் நெதர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அங்குள்ள லெய்டன் பல்கலைக்கழகத்தில் இத்தனை வருடங்கள் பாதுகாக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவிற்கு திரும்பி தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மோடி அவரது சமூக வலைத்தளத்தில், “இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம். 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்கு திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.

சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன.

மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம். நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்திலிருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.