×

“எதிர்க்க யாரும் இல்லை... அதிமுக மேலூர் வேட்பாளர் அன்னபோஸ்டாக வெற்றி பெறுவார்” - ராஜன் செல்லப்பா

 

மேலூர் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்ய அதிக வாய்ப்பு என அதிமுக மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா மேலூரில் பேட்டியளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம், மாவட்ட செயலாளரும் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, “மேலூர் தொகுதி என்பது அதிமுகவின் கோட்டை. இங்கு கடந்த முறை அதிமுக 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளான்  என்ற செல்வம் வெற்றி பெற்றுள்ளார். அதனை கருத்தில் கொண்டு தற்போது வரை எதிர்க்கட்சிகள் தற்போது நடைபெற உள்ள தேர்தலுக்கு வேட்பாளரை அறிவிக்காமல் இருப்பதால் அதிமுக வேட்பாளர்  போட்டி இன்றி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஒருவேளை நாளை வேட்பாளர் அறிவிக்கப்பட்டு போட்டி ஏற்பட்டாலும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் மூன்றாவது முறையாக அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளான் வெற்றி பெறுவார்.

தேர்தலுக்கு பின்னர் அதிமுக அழிந்துவிடும் என தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் கூறுகிறார். இயற்கையாக விசில் சத்தத்துடன் கூடிய அதிமுகவை செயற்கை விசில் கொண்டு அழித்துவிட முடியாது. அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் அழிந்து போனதாகத்தான் வரலாறு. தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமோக வரவேற்பு உள்ளது. எனவே 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும்” என்றார்.