திருமுல்லைவாயல் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்..!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் நேற்று (நவம்பர் 23) இரவு கனமழை பெய்தது. குறிப்பாக திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள விவேகானந்தர் தெரு, விஜி தெரு, குறிஞ்சித் தெரு, சூர்யகாந்தி தெரு, சாமந்தி தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் கனமழையால், மழைநீர் அதிகளவில் தேங்கியது.
இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளது. இதனால், பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் அங்குள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீட்டின் வாசல் முதல் சுற்றுப்புறம் வரை மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகள், பணிகளுக்குச் செல்லும் பொதுமக்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அவசர தேவைகளுக்குக்கூட வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் அச்சத்துடன் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், குடியிருப்புச் சாலைகளில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மழைநீரில், கழிவுநீரும் கலக்கும் அபாயம் இருப்பதால் தொற்றுநோய் பரவும் அச்சமும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மழைக்காலத்திலும் திருமுல்லைவாயல் பகுதியில் இதுபோன்ற நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மழைநீர் முறையாக வெளியேறுவதற்கு போதிய வடிகால் வசதிகள் இல்லாததே இதுபோன்ற பாதிப்புகளுக்கு முக்கிய காரணம் எனவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே, "ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, தேங்கியுள்ள மழைநீரை மோட்டர் பம்புகள் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிர்காலத்தில் மழைக்காலங்களில் குடியிருப்புப் பகுதிகள் பாதிக்கப்படாத வகையில் முறையான மழைநீர் வடிகால் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்" என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.