மழையில் நனைந்து வீணாகும் நெல்மணிகள்; விவசாயிகள் வேதனை..!!
கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில், கொள்முதல் செய்யப்பட்டும் நெல் மூட்டைகள், பட்டீஸ்வரம் திறந்த வெளி சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. தனியாருக்கு சொந்தமான இந்த இடத்தில், நுகர்பொருள் வாணிபக்கழகம் இவ்வாறு நெல் மூட்டைகளை சேமித்து வைத்துள்ளது.30 ஆயிரம் டன் அளவுக்கு சேமிக்ககூடிய இந்த கிடங்கில் நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பி வைக்காமல் பல மாதங்களாக அப்படியே வைக்கப்பட்டுள்ளன.
பல சாக்கு மூட்டைகள் கிழிந்து நெல் மணிகள் வெளியே கொட்டிக் கிடக்கின்றன. மழையில் நனைந்த நெல் மணிகள் முளைப்பு விட்ட நிலையில் உள்ளன.
நேற்று இரவு கும்பகோணம் பகுதியில் 11 செ.மீ., அளவுக்கு பெய்த மழையால், திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் தண்ணீர் தேங்கியது. மழைநீருக்கு நடுவே நெல் மூட்டைகள் நனைந்து கிடப்பதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
வியர்வை சிந்தி உழைத்து அறுவடை செய்த நெல்மணிகளை வீணாக்கும் அதிகாரிகளின் அலட்சியத்துக்கு முடிவு கட்ட வேண்டும்' என்று விவசாயிகள் தெரிவித்தனர்.