×

தெரு நாய்கள், பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக்கப்படும்: அமைச்சர் கமலி..!

 

கால்நடை பராமரிப்பு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் கமலி பல்வேறு முக்கிய அறிவிப்புக்களை வெளியிட்டார்.

  • செட்டிநாடு, நடுவூர் மற்றும் சின்னசேலம் ஆகிய இடங்களில் உள்ள அரசுப் பண்ணைகளில் முயல் வளர்ப்புப் பிரிவுகளை நிறுவி புறக்கடை முயல் வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில் முயல் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், ரூ.0.28 கோடி செலவில் புறக்கடை முயல் வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.0.70 கோடி செலவில் பன்றி வளர்ப்புப் பண்ணைகள் அமைக்கப்படும்.
  • திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ரூ.30 கோடி செலவில் உயிரியல் பாதுகாப்பு நிலை BSL-3 ஆய்வகம் அமைக்கப்படும்.
  • திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறையில் ரூ.34 கோடி மதிப்பீட்டில்,நாளொன்றுக்கு 30 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட நவீன ஒருங்கிணைந்த இறைச்சி பதப்படுத்தும் ஆலை அமைக்கப்படும்.
  • சிவகங்கை மாவட்டம் செட்டிநாட்டில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் கிடேரி வளர்ப்பு மையம் அமைக்கப்படும்.
  • விலங்கு இனப்பெருக்க கட்டுப்பாடு (ABC) நடவடிக்கைகளைத் தடையின்றி மேற்கொள்ள அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கான பயன்பாட்டுப் பொருட்கள் கொள்முதல் செய்யப்படும்.
  • தெரு நாய்கள் மற்றும் பூனைகளுக்குத் தடுப்பூசி செலுத்துதல் - வெறிநோயைத் தடுப்பதையும் கட்டுப்படுத்துவதையும் வலுப்படுத்தவும், வெறிநோயற்ற தமிழ்நாட்டை உருவாக்கும் இலக்கை அடையும் பொருட்டு, தெரு நாய்கள் மற்றும் பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி (ARV) செலுத்தும் பணி வலுப்படுத்தப்படும்.
  • தெருவிலுள்ள விலங்குகளைத் தத்தெடுக்கும் திட்டத்திற்கான டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும்.
  • திருநெல்வேலி மாவட்டம், அபிஷேகப்பட்டியில் உள்ள மாவட்ட கால்நடைப் பண்ணையில் 0.71 கோடியில் பன்றி வளர்ப்புப் பண்ணை அமைக்கப்படும்.
  • துறைசார் பண்ணைகளில் ரூ.1.25 கோடி செலவில் ஊறுகாய்ப்புல் (Silage) உற்பத்தி அலகுகள் நிறுவப்படும்.
  • கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • ஓசூர், கோழி வளர்ப்பு உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியில் மாணவர்களுக்கான கூடுதல் விடுதிக் கட்டடம் அமைக்கப்படும்.
  • தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணவிகளுக்கான கூடுதல் விடுதிக் கட்டடம் அமைக்கப்படும்.
  • உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணவிகளுக்கான கூடுதல் விடுதிக் கட்டடம் அமைக்கப்படும்.
  • கால்நடை மருத்துவ நிலையங்கள் மற்றும் செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்களின் சிறப்பான செயல்பாடுகளை அங்கீகரிக்கும் வகையில் கால்நடை காவலன் விருது அறிமுகப்படுத்தப்படும்.
  • உதகமண்டலம், மாவட்ட கால்நடைப் பண்ணையில் 6.60 கோடி செலவில் பாலினம் பிரிக்கப்பட்ட உறைவிந்து (Sex-Sorted Semen) உற்பத்தி செய்யப்படும்.