×

ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு! திருவண்ணாமலையில் சோகம்

 

திருவண்ணாமலையில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட விவசாயி சிகிச்சை பலனின்றி பரிதாப பலியானார். 

திருவண்ணாமலை அடுத்த புது சாணிப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் ஆண்ட்ரூஸ் (48). கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை அவரது கிராமத்தில் நாய் ஒன்று கடித்ததாகவும் ஆனால் அது தொடர்பாக எவ்வித முதலுதவியும், மருத்துவ சிகிச்சையும் எடுக்காமல் விவசாயி காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்த நிலையில் அவரது உடலில் சில மாற்றங்கள் நிகழ்வதை அவரே உணர்ந்த பின்பு கடந்த 8-ம் தேதி கொளக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அன்றைய தினமே அனுமதிக்கப்பட்ட நிலையில் ரேபிஸ் நோய் தொற்று அவருக்கு இருப்பது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி இன்று காலை விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.


இந்த நிலையில் திருவண்ணாமலை ஆட்சியை க. தர்ப்பகராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் வெறிநாய் கடியால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு மட்டும் சுமார் 10 ஆயிரத்து 479 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு, அதில் 3 பேர் ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழந்து உள்ளனர். வெறி நோய் (ரேபிஸ்) என்பது வைரசினால் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஓர் உயிர்க் கொல்லி நோயாகும் என்றும், நாய் கடித்த முதல் நாள் முதல் 20 வருடங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் வெறிநோய் (ரேபிஸ்) வெளிப்படலாம். நாய் கடித்தால் பதட்டம் அடையாமல், கடித்த இடத்தை சுத்தமான தண்ணீர், சோப்பு போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் வரை நன்றாக கழுவி, நாயின் வாயிலிருந்து பரவும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை நீக்கிட வேண்டும் என்றார்.

நாய் கடித்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனை சென்று நாய்க்கடி தடுப்பூசி கட்டாயமாக போட்டுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் நாய்க்கடி தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது என்று கூறினார். இத்தடுப்பூசியானது 4 தவணைகளாக நாய் கடித்த முதல் நாள், 3-ம் நாள், 7-ம் நாள் மற்றும் 28-ம் நாள் செலுத்தப்படும் என்றும்நாய் கடித்த நபர் நாய் கடி தடுப்பூசியினை கட்டாயம் 4 தவணைகளும் செலுத்திக் கொள்ளவேண்டும். தவறினால் வெறி நோய் (ரேபிஸ்) பாதிப்பினை தடுக்க முடியாது என்றார். வீட்டில் வளர்க்கும் நாய் அல்லது தெரு நாய் அல்லது வேறு விலங்குகள் கடித்தாலோ அல்லது ஆழமான நகக்கீறல் பட்டாலோ உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். பொது மக்கள் வீட்டில் வளர்க்கும் நாய் அல்லது தெரு நாய் கடித்தால் கவனக்குறைவாக இல்லாமல் மேற்கண்ட மருத்துவ அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். மேலும் வெறிநாய் பாதிப்பு ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டு கொண்டு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.