×

கல்குவாரி மற்றும் கிரஷர்கள் தொழிற்சாலை உரிமையாளர்களின்  கோரிக்கைகளை பரிசீலனை செய்க - ஜி.கேவாசன் 
 

 

கல்குவாரி மற்றும் கிரஷர் தொழிற்சாலைகளின் வேலை நிறுத்ததால் அதனை சார்ந்த பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே அவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். 

இதுக்குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் கல்குவாரி மற்றும் கிரஷர் தொழிற்சாலைகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். கட்டுமானத்துறையில் பெருங்காற்றி, அரசிற்கு பெரும் வருமானத்தை ஈட்டித்தரும் கல்குவாரி, கிரஷர் மற்றும் அதனைச் சார்ந்த தொழில் வளர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் அரசிற்கு செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களும் முறையாக அளித்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிம வளத்துறை ஆகியோர்களிடம் உரிய அனுமதிப்பெற்று 2 ஆயிரம் கல்குவாரிகள், 3 ஆயிரம் கிரஷர்கள் இயங்கி வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெறுகின்றனர். தினசரி ரூபாய் 50 கோடிக்கும் மேலான கட்டுமான பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.அரசின் விதிகளுக்குட்பட்டு இயங்கிவரும் கல்குவாரிகள் தங்கள் உரிமைத்தை புதிப்பிக்க விண்ணப்பிக்கும் போது பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. 2014 ஆண்டிற்கு முன்பு இருந்த பழைய நடைமுறையிலேயே தற்பொழுதும் இயங்க அனுமதி வழங்க வேண்டும். மேலும் 5 ஹெக்டேருக்கு மேல் குவாரிகள் அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தி அதன்பின் உரிமம் வழங்கப்படுகிறது. இதில் 5 ஹெக்டேர் என்பதை 25 ஹெக்டேராக உயர்த்தி அனுமதி வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்து கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கல்குவாரி மற்றும் கிரஷர் தொழிற்சாலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் கட்டுமான மூலப் பொருட்களான, எம்.சாண்ட், பி. சாண்ட். ஜல்லி போன்ற பொருட்கள் கிடைக்காமல் கட்டுமான தொழில்கள் முடங்கியுள்ளது. இதனால் தனியார் மற்றும் அரசு கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். மேலும் பல்லாயிரகணக்கான லாரிகளும் மற்றும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தினமும் அரசிற்கு பலநூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. ஆகவே கல்குவாரி மற்றும் கிரஷர்கள் தொழிற்சாலை உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலனை செய்து தமிழக அரசு விரைந்து அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.