"போலி மருந்துகளுக்கு முற்றுப்புள்ளி!" - அனைத்து மருந்தகங்களிலும் க்யூஆர் கோட்; தமிழக அரசின் அதிரடி உத்தரவு.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலி இருமல் மருந்து விற்கப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாடு மருத்துக் கட்டுப்பாட்டுத்துறை அந்த நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டது. மருந்து நிறுவனம் மூடப்பட்டு, சம்மந்தப்பட்ட இருமல் மருந்து தடை செய்யப்பட்டது.
இதை போலவே புதுச்சேரியில் கடந்த மாதம் பிரபல நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, போலியான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டதை கண்டறிந்து சம்பந்தப்பட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அந்த மருந்துகள் தமிழ்நாட்டில் எங்கெங்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து, அந்த குறிப்பிட்ட பேட்ச் மருந்துகளை தடை செய்ய வேண்டும் என மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை உத்தரவு வழங்கியிருந்தது.
இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் போலி மருந்துகள் விற்கப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் புதிய செயலியை உருவாக்கி, அதில் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. அதில், குறிப்பாக மருந்துகள் உட்கொண்ட பின் எதிர்வினைகள் ஏற்பட்டாலோ அல்லது போலி மருந்துகள் உள்ளிட்டவை விற்பனை செய்தாலோ மருந்தகங்களில் ஒட்டப்பட்டு இருக்கக்கூடிய க்யூஆர் ஸ்கேன் மூலம் புகார்கள் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
மேலும், தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உருவாக்கிய இந்த க்யூஆர் ஸ்கேன் கொண்ட ஸ்டிக்கரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் ஓட்ட வேண்டும் என்று மருந்து கடையின் உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.