பிரசாந்த் கிஷோர் பேட்டியால் விஜய் அதிருப்தி? “விஷமக் கருத்தை திணிக்கும் முயற்சி”- புஸ்ஸி ஆனந்த் விளக்கம்
தவெக பெயரில் விஷமக் கருத்தை திணிக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் கூறியுள்ளார்.
2026 தேர்தலில் அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைக்கலாம் என பரவலாக பேசப்பட்ட நிலையில், பிரசாந்த் கிஷோரின் பேட்டி அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்தது. தவெகவின் நிலைப்பாடு, தேர்தல் வியூகம் குறித்த பிரசாந்த் கிஷோர் பேட்டிக்கு விளக்கம் அளித்துள்ள தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், “தொலைக்காட்சி, செய்தி ஊடகங்களில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தலைவர் அவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கொள்கை பரப்பு மற்றும் செய்தித் தொடர்பு நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகள் மட்டுமே கழகத்தின் கருத்து மற்றும் நிலைப்பாடாகும். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரைக் கழகத் தலைவர் அவர்கள் அறிவித்து, கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை, மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்று மற்றும் ஊக்கத் தொகை வழங்கியது, வெற்றிக் கொள்கைத் திருவிழா, கழக ஆண்டு விழா எனத் தமிழக வெற்றிக் கழகம் வீறுநடை போட்டு, மக்களின் பேராதரவுடன் மிகப் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சில அரசியல் கட்சிகள், தங்கள் ஆதரவாளர்களை, பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்களாகச் சித்திரித்து ஊடக விவாதங்களில் பங்கேற்கச் செய்து, திட்டமிட்ட சில விஷமக் கருத்துகளைத் திணிக்கும் பணியைச் செய்து வருகின்றன. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.