"எடப்பாடி பழனிசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும்; வரவேற்கக் கூடாது"- புகழேந்தி
பொள்ளாச்சி தீர்ப்புக்கு எடப்பாடி பழனிசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும்; வரவேற்கக் கூடாது என அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி கருத்து கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த பெங்களூர் புகழேந்தி, “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நாடே எதிர்பார்த்த தீர்ப்பு வந்துள்ளது, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு நீதிபதி வழங்கி உள்ளது பாராட்டுகுறியது. இந்தத் தீர்ப்பின் மூலம் தினம் தினமும் குற்றவாளிகள் தண்டனையை அனுபவிக்கவேண்டும், அதிமுகவை சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உதயநிதி ஸ்டாலினை பார்த்து நிரூபிக்க முடியுமா? எனக் கேட்டார். இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிரூபித்து காண்பித்து உள்ளார். அதிமுக ஆட்சியில் தான் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்தது. சம்பவம் நடந்த இடத்தின் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் தான். அதிமுக ஆட்சியில் நடந்த இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் வந்து உள்ள தீர்ப்பை இபிஎஸ் வரவேற்கிறார். அவருக்கு வெட்கமாக இல்லையா? இந்த வழக்கில் அதிமுகவை சேர்ந்தவர் தான் தற்போது தீர்ப்பில் குற்றவாளியாக இருக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமி, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் ராஜினாமா செய்யவேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும், அதைப் பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை. கோவை மண்டலத்தில் அதிமுகவால் ஓட்டு கேட்டு செல்வே முடியாது. நானே எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முன் வைத்து பிரச்சாரம் செய்வேன். அதிமுக ஆட்சியில் நடந்த சம்பவத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும், நாங்கள் தான் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்தோம் என எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார், அதே போல் கோடநாடு வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கலாமா?” என கேள்வி எழுப்பினர்.