×

“11 தோல்விகளை சந்தித்த பழனிசாமிக்கு 12வது தோல்வியை 2026 தேர்தல் தரும்” - அமைச்சர் ரகுபதி

 

எடப்பாடி பழனிச்சாமியை டிடிவி தினகரன் விமர்சனம் செய்து பேசிவிட்டு மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளது வெட்கக்கேடு என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, “தேசிய ஜனநாயக கூட்டணி என்பது அதிமுகவின் ஒரு பகுதியும் அதேபோல பாஜகவும் இணைந்ததை தவிர அதை நாங்கள் வலுவாக பார்க்கவில்லை, அது பலவீனமான கூட்டணி, எத்தனை கட்சிகள் அந்த கூட்டணியில் வந்து சேர்ந்தாலும் திமுகவின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்தியா கூட்டணியை யாராலும் எதுவும் செய்ய முடியாது தமிழ்நாட்டு மக்களின் மனதில் யார் இருக்கிறார்களோ அவர்கள் தான் வெல்ல முடியுமே தவிர கூட்டத்தைக் கூட்டி காட்டி யாராலும் வெல்ல முடியாது. தமிழ்நாட்டின் மக்களின் மனநிலையை இன்றைக்கு ஒவ்வொரு சர்வே மூலமாக நாங்கள் அறிந்து வருகிறோம். மீண்டும் திராவிட மாடலா ஆட்சி இரண்டு தொடர வேண்டும் அதன் மூலமாக தங்களுக்கு இன்னும் பல நன்மைகள் கிடைக்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு மக்களுடைய விருப்பம். இந்த ஐந்தாண்டு காலம் நாங்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களுக்கான திட்டங்களை எல்லாம் நிறைவேற்றி இருக்கின்ற அரசு தான் திராவிட மடல் அரசு. இந்த அரசு தொடர வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு மக்களின் விருப்பம். அந்த விருப்பத்தை மோடியாலோ வேறு யாராலும் புரிந்து கொள்ள முடியாது. 

கிரைம் மாஃபியா கரப்ஷன் எல்லாம் பிரதமர் மோடியின் கட்சிக்கும் அவர்களது கூட்டணிக்கும் தான் பொருந்துமே தவிர எங்களுக்கு ஒரு துளியும் பொருந்தாது. 11 முறை தேர்தலில் தோல்வியடைந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு 12-வது தோல்வியை 2026 நிச்சயமாக தரும். துணை முதலமைச்சர் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். அவரது பணியை செய்கிறார் அமைச்சர்கள் அவர்களது பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் யாராலும் அசைக்க முடியாத ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது தவிர மற்றவர்கள் சொல்லுகின்ற அளவிற்கு பலவீனமான ஆட்சி கிடையாது. பலமான ஆட்சியில் இருக்கிறோம் நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம் அதில் எந்த சந்தேகமும் கிடையாது. தேர்தலுக்காக பிரதமர் ஆயிரம் பேசினாலும் தேர்தலில் எதிரொலிக்காது தமிழ்நாட்டு மக்கள் கெட்டிக்காரர்கள் அவர்களுக்கு எது நல்லது எது கெட்டது என்பது தெரியும். தங்களுக்கு எந்த ஆட்சி உதவி செய்யும் என்பது தமிழ்நாடு மக்களுக்கு தெரியும் மோடி ஆயிரம் குற்றச்சாட்டுகளை சொல்லலாம் குறைகளை சொல்லலாம் ஆனால் அவர் தனக்கு முன்னால் இருக்கக்கூடிய மாநிலங்களை எல்லாம் பார்த்துவிட்டு பாஜக ஆளுகின்ற மாநிலங்களையெல்லாம் பார்த்துவிட்டு அதைவிட தமிழ்நாட்டில் ஏதாவது குற்றங்கள் கூட என்று சொன்னால் அப்போது நாங்கள் பதில் அளிக்கிறோம். 

யார் வந்தாலும் வந்தவர்களை வரவேற்கின்ற இயக்கம் தான் திமுக. அவர்களுக்கு உரிய மரியாதை தருகிற தலைவர் தான் மு க ஸ்டாலின். எங்களை நம்பி வருகின்றவர்கள் கெட்டுப் போபவர்கள் கிடையாது. மற்றவர்களை நம்பி செல்பவர்கள் மோசம் போவதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. எடப்பாடி பழனிச்சாமியை டிடிவி தினகரன் விமர்சனம் செய்து பேசிவிட்டு மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளது வெட்கக்கேடு. தேசிய ஜனநாயக கூட்டணி காட்டும் ஒட்டுமொத்த கூட்டத்தையும் நாங்கள் மகளிர் அணி கூட்டத்தின் மூலமாகவே பீட் செய்து விடுவோம். பகுதி பகுதியாக மக்கள் அலையை கொண்டு செல்கின்ற சக்தி இந்தியாவிலேயே திமுகவுக்கு இருப்பதைப் போல வேறு எந்த இயக்கத்துக்கும் கிடையாது. நாங்கள் எப்போதும் எதிரிகள் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு இறுமாப்பு கொண்டவர்கள் கிடையாது. எதிரிகள் இருக்கிறார்கள் ஆனால் எங்களோடு மோதும் அளவிற்கு அவர்கள் வலிமையாக இல்லை. தேர்தல் என்று வந்து விட்டால் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். மக்களிடத்தில் நாங்கள் சென்று எங்கள் கருத்துக்களை சொல்கின்ற பொழுது மக்கள் யார் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். நாங்கள் சொன்னதை செய்துள்ளோம் மகளிர் உரிமைத்தொகை தருகிறோம் என்று கூறினோம் அதை தந்துள்ளோம் ஆனால் அதை அன்றைக்கு கிண்டல் செய்தவர் போய் பாடி பழனிச்சாமி. குழந்தைகளுக்கு முத்தாய் கொடுத்து ஆசை வார்த்தை கூறுவதைப் போல மகளிர்க்கு உரிமை தொகை தருவதாக திமுக கூறுகிறது என்று விமர்சனம் செய்தார். 

நாங்கள் ஒரு கோடியே 32 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை தந்திருக்கிறோம். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு 2000 ரூபாய் தருகிறோம் என்று கூறி ஏமாற்றிய எடப்பாடி பழனிச்சாமியை மக்கள் நம்புவார்களா, அல்லது ஒரு கோடியே 32 லட்சம் குடும்பங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையைக் கொடுக்கிற தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினை நம்புவார்களா என்பதை எண்ணி பார்க்க வேண்டும். கவுண்டவுன்ஸ் ஸ்டார்ட் ஆகிவிட்டது தான் அது எங்கள் வெற்றிக்கான கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது” என்று தெரிவித்தார்.