×

எதிர்க்கட்சிகளை பழிவாங்கவே அமலாக்கத்துறை சோதனை - நாராயணசாமி

 

எதிர்க்கட்சிகளை பழிவாங்கவே அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெறுகின்றன என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். 

சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 9 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை, விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடுகளில் சோதனையிட்டு வருகின்றனர். விழுப்புரத்தில் வீடு பூட்டியிருந்ததால் காத்திருந்த அதிகாரிகள், வீட்டை திறக்க வைத்து சோதனை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் , கிழக்கு சண்முகாபுரம் காலனி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 11 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு செம்மண் குவாரி தொடர்பாக வழக்கில் சோதனை நடைபெறுகிறது.

இந்நிலையில், அமலாக்கத்துறையின் சோதனைக்கு புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள் அவர், எதிர்க்கட்சிகளை பழிவாங்கவே அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெறுகின்றன. திமுகவோ, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியோ எந்த காலத்திலும் இவர்களுக்கு அஞ்சுபவர்கள் அல்ல புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி நாராயணசாமி கூறியுள்ளார்.