காதலர் தின அதிரடி சலுகைக்குத் தடை: 'பை ஒன் கெட் ஒன்' கொடுத்த புதுச்சேரி ஒயின் ஷாப்களுக்கு அதிகாரிகள் 'நோட்டீஸ்'..!
காதலர் தினம் கொண்டாடும் வகையில் நட்சத்திர விடுதிகளில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. புதுச்சேரியில் பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளின் மதுபானங்கள் குறைந்த விலையில் தரமானதாக கிடைப்பதால் பல்வேறு நாடுகள், மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து விடுதியில் தங்கி மது அருந்திவிட்டு செல்கின்றனர். இதனால் மதுபானகடைகளுக்கிடையே பல்வேறு போட்டிகள் நிலவி வருகிறது. ஒரு மதுபான கடைகள் உள்ள இடத்தின் அருகிலேயே மற்றொரு மதுபானை கடைகளை திறக்கின்றனர்.
காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்களை வரவேற்கும் விதமாக சில மதுபான கடைகளில் புதிய ஆபர்களை கடை நிர்வாகம் அறிவித்துள்ளது. புது ஆபரை புதுச்சேரி ராஜராஜன் ஒயின்ஸ் தருகிறது. அதாவது ஒயின் வாங்கினால் பீர் இலவசம். ஏன் இந்த ஆபர் என ஒயின்ஸ் உரிமையாளர் கணேஷ் கூறுகையில், நாங்கள் எப்போதும் அடக்க விலைக்கு தான் மது வகைகளை விற்போம். காதலர்தினத்தையொட்டி புது விதமான காம்போ ஆபர் தர திட்டமிட்டோம். உலகளவில் ஒயின், பீர் இணைந்த காக்டெயில் பேமஸ், ஆனால் அது இந்தியாவில் இல்லை. நீர் சத்தும் கிடைக்கும். அதனால் முழு கிரேப் ஒயினான மும்தாஜ் ஒயின் க்வார்ட்டர் பாட்டில் வாங்கினால் சூப்பர் ஸ்ட்ராங் பீர் ஒன்று இலவசமாக தரவுள்ளோம். ஒயின் பாட்டில் ரூ.96 தான். அதற்கு ரூ. 102 மதிப்புள்ள ஸ்ட்ராங்க் பீர் இலவசமாக தரவுள்ளோம். காதலர் தினத்தன்று காலை 8 முதல் இரவு 11 வரை இந்த ஆபர் தரவுள்ளோம். அதுமட்டுமில்லாமல் ஒரு புல் பாட்டில் மும்தாஸ் ஒயின் வாங்கினால் நான்கு ஸ்ட்ராங் பீர் இலவசமாக கிடைக்கும். பிராந்தி விஸ்கியை விட இந்த காம்பினேஷன் டிரிங் நல்லா இருக்கும். இதுதான் லவ்வர்ஸ் டேவுக்கு நாங்க வாடிக்கையாளருக்கு தரும் பிராப்பர் ஆபர் என்கின்றனர்.
அதே போல் மற்றுமொரு கடையில் ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் என ஆபர் விலையில் மதுபானங்கள் விற்பனை.இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த கலால் துறை தாசில்தார் ராஜேஷ்கண்ணா இரவு திடீரென புதிய ஆபரை அறிவித்த கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் மதுபான கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆபர் விலையில் மதுபானங்கள் விற்பனை செய்வது கலால் விதிகளுக்கு எதிரானது எனவும், மதுபானங்களை ஆபர் விலையில் கொடுக்க கூடாது எனவும் , அவ்வாறு கொடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும், அந்த கடைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கடை நிர்வாகம் தாங்கள் அறிவித்த ஆபர்களை வாபஸ் பெற்றது. கலால் துறை அதிகாரிகளின் இந்த திடீர் ஆய்வால் மதுபான கடை உரிமையாளர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர்.