புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ - அனுமதி கேட்டு 3வது முறையாக தவெக மனு
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி கிடைக்காத நிலையில் மீண்டும் டிஜிபி அலுவலகத்துக்கு தவெக பொதுச்செயலர் ஆனந்த் வந்தார். மீண்டும் நாளை வருமாறு ஜஜி அனுப்பி வைத்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு பயணம் நடத்த கடந்த அக்டோபர் மாதம் 11-ம் தேதி தவெக நிர்வாகிகள் முதல்வரை சந்தித்தும், காவல்துறை தலைமையகத்திலும் அனுமதி கேட்டனர். இதனிடையே கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தாமல் இருந்தார். இதையடுத்து புதுச்சேரியில் நடைபெற இருந்த மக்கள் சந்திப்பு பயணமும் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரியில் வரும் டிசம்பர் 5-ம் தேதி விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்டு, தவெக நிர்வாகி புதியவன் தலைமையில் தவெகவினர் புதுச்சேரி டிஜிபியிடம் அண்மையில் மனு அளித்தனர். அந்த கடிதத்தில், ‘தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் புதுச்சேரியில் காலாப்பட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்குகிறார். அதன்பின் அஜந்தா சிக்னல், உப்பளம் வாட்டர் டேங்க் (சோனாம்பாளையம் சந்திப்பு), மரப்பாலம் சந்திப்பு, அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில் ஆகிய இடங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
இதில் உப்பளம் சோனாம்பாளையம் சந்திப்பில் தவெக தலைவர் விஜய் உரையாற்றுகிறார். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதியும், பாதுகாப்பும் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து முதல்வர் ரங்கசாமியையும் சந்தித்து, ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கும்படி கோரினர். அப்போது சோனாபாளையம் சந்திப்பது சிறிய இடம், அதிக அளவில் மக்கள் கூடினால் பல்வேறு அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறி, ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு போலீஸ் தலைமையகம் அனுமதி மறுத்து விட்டது.
இதைத் தொடர்ந்து தவெக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் இன்று ஐஜி ஏ. கே. சிங்கிளாவை சந்தித்து விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி தருமாறு வலியுறுத்தினார். டிஜிபி, டிஐஜி ஊரில் இல்லை. அவர்கள் நாளை வருவார்கள், நாளை வந்தவுடன் வாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார். இதைத்தொடர்ந்து வெளியே வந்த ஆனந்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "ரோடு ஷோ நடத்துவதற்கு அனுமதி கேட்பது தொடர்பாக நாளை நடைபெறும் கூட்டத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர்" என்றார்.