×

ஆட்சியமைக்க உரிமை கோரினார் ரங்கசாமி-13ம் தேதி பதவியேற்பு

 

ஆட்சியமைக்க உரிமை கோரினார் ரங்கசாமி!


புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவராக ரங்கசாமியை எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர். ஆட்சி அமைக்க உரிமைக்கோரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை  முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். 


புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்ஆர்.காங்கிரஸ் 12, பாஜ 4, அதிமுக 1, லஜக 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. புதுச்சேரியில் உள்ள 30 எம்எல்ஏக்களில் ஆட்சி அமைக்க 16 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 18 எம்எல்ஏக்கள் பலம் உள்ளதால் மீண்டும் ரங்கசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. என்ஆர்.காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை கட்சித்தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார். பாஜ சட்டப்பேரவைக் கட்சித்தலைவராக நமச்சிவாயம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

என்டிஏ  கூட்டணி அமைச்சரவையில் பாஜவுக்கு எத்தனை அமைச்சர்கள் என்ற முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்த முடிவும் எட்டவில்லை.  அதைத்தொடர்ந்து முதல்வர் பதவியை ரங்கசாமி ராஜினாமா செய்து துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் கடிதம் அளித்தார். இதைத்தொடர்ந்து இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது. கூட்டத்தில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ரங்கசாமி, நமச்சிவாயம், அதிமுக மாநிலச்செயலர் அன்பழகன், லஜக தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் மற்றும் என்டிஏ கூட்டணி எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார். ரங்கசாமி தலைமையில் ஆட்சிஅமைக்க பாஜக, அதிமுக, லஜக கட்சிகளின் சார்பில் ஆதரவு கடிதங்களை வழங்கினர்.

கூட்டத்துக்கு பின் ரங்கசாமி கூறுகையில்,  தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவராக என்னை தேர்வு செய்துள்ளனர். புதுச்சேரியில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி  உரிமைக்கோரி ஆளுநரை சந்திக்கவுள்ளேன். அப்போது என்டிஏ எம்எல்ஏக்கள் தலைவராக தேர்வு செய்ய கடிதத்தை அளிப்பே்ன். ஆளுநர் சந்திப்புக்கு பிறகு எப்போது பதவியேற்பு விழா தேதி பற்றி முடிவு செய்யப்படும். அமைச்சர்கள் பதவி யார் யாருக்கு, எக்கட்சியினருக்கு என்பது பதவி தரும் போது தெரியும். பேரவைத்தலைவர், அமைச்சர்கள் யார் என்பதை பிறகு தெரிவிக்கிறேன்" என்றார்.
துணைமுதல்வர் பதவியை பாஜக கேட்டுள்ளது, நியமன எம்எல்ஏக்கள் யார்யார், தவெக தலைவர் விஜய்  விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் தரவில்லை. அதைத்தொடர்ந்து தேசிய ஜனநாயகக்கூட்டணி ஆட்சி அமைக்க உரிமைக்கோரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் முதல்வர் ரங்கசாமி கடிதம் தந்தார். உடன் என்டிஏ கூட்டணி கட்சிகளான என்ஆர்காங்கிரஸ், பாஜக, அதிமுக, லஜக எம்எல்ஏக்கள் உடன் இருந்தனர். இச்சந்திப்புக்கு பிறகு முதல்வர் ரங்கசாமி கூறுகையில், "புதுச்சேரியில் என்டிஏ ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி ஆளுநரிடம் கடிதம் தந்துள்ளேன்.வரும் 13ம் தேதி காலை முதல்வராக பதவி ஏற்கிறேன்" என்றார். அதைத்தொடர்ந்து பாஜக மாநிலத்தலைவர் ராமலிங்கம் கூறுகையில், ஏற்கெனவே கடந்த என்டிஏ கூட்டணியில் இருந்ததுபோல் புதிதாக அமையும் தேசிய ஜனநாயகக்கூட்டணி அரசில் பாஜகவுக்கு பேரவைத்தலைவர், இரு அமைச்சர்கள் தர கோரியிருந்தோம்.பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது" என்றார்.