×

காவலர்களுக்கு சீருடை படியாக ரூ.10 ஆயிரம் - அரசு ஒப்புதல்! 

 

புதுச்சேரி காவல் துறையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பணிபுரிந்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் காவல் துறையினருக்கு சீருடை வழங்கப்படும். கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து சீருடைக்கு பதில் அவரவர் வங்கிக் கணக்கில் பணம் தர முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் சீருடைக்கான தொகை ஐந்து ஆண்டுகளாக தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வேறு வழியில்லாமல் காவல் துறையினர் சொந்த செலவில் சீருடைகளை வாங்கினார்கள்.

 

நீண்ட நாட்களாகவே சீருடைப் படியையும் ஏற்கெனவே நிலுவையிலுள்ள படி தொகையையும் வழங்க வேண்டும் என போலீஸார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.  அதன் பலனாக சீருடைப் படியின் கீழ் சீருடை, ஷூ, சலவை ஆகியவை மொத்தமாக உள்ளடக்கி ஒரே சீருடைப் படியாக வழங்க குடியரசுத் தலைவர் நிர்ணயம் செய்துள்ளார். அதன்படி புதுச்சேரி போலீஸாருக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என சொல்லப்பட்டது. 

அதேபோல சீருடை படியை தவிர்த்து சீருடைப் பராமரிப்பு, சீருடை சலவை மற்றும் ஷூவுக்குத் தனியாகத் தொகை தரப்படாது என்றும் இனி ஆண்டுதோறும் ஜூலை மாத ஊதியத்தின்போது இத்தொகை வரவு வைக்கப்படும் எனவும் மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இம்மாதத்திலிருந்து சீருடைப் படி உத்தரவு அமலாகிறது. வரும் 2022-23ஆம் நிதியாண்டில் ஜூலை மாதத்திலிருந்து  காவல் துறையினரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். கடந்த நான்கு ஆண்டுகளுக்கான சீருடைப்படி பாக்கி பற்றி அரசு எவ்வித தகவலும் தெரிவிக்காததால் போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.