×

புதுச்சேரியில் 400-ஆக இருந்த மதுபானக்கடை 900 ஆக உயர்வு- நாராயணசாமி

 

 

தமிழகம் அமைதியான மாநிலம் என உச்சநீதிமன்றமே பாராட்டி உள்ளதாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, “காங்கிரஸ் கட்சிக்கு பெரும் ஆதரவு தந்து வாக்களித்த கர்நாடக மக்களுக்கு நன்றி. 2018 ஆம் ஆண்டு கர்நாடகா தேர்தலில் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைத்து ஒன்றரை வருடம் ஆட்சி நடந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியினர், பாஜக தலைவர்கள் கூட்டு சதி செய்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பல ஆயிரம் கோடி செலவு செய்து ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தார்கள். கர்நாடகத்தில் எடியூரப்பா ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்றது. 40 சதவீத கமிஷன் ஆட்சி என்று ஒப்பந்தகாரர்கள் விமர்சனம் செய்தது அனைவருக்கும் தெரியும்.அனைத்து துறையிலும் பாரதிய ஜனதா ஆட்சியின் ஊழல் நடைபெற்றது. பாஜக ஆட்சி ஏற்பட்டால் ஒளிரும் மிளிரும் என்றார்கள். ஆனால் கர்நாடகத்தில் பாஜக ஆட்சி வந்த பிறகு வளர்ச்சி ஏதும் ஏற்படவில்லை. வேலை இல்லா திண்டாட்டம்,விலைவாசி உயர்வு, விவசாயிகள் புறக்கணிப்பு செய்யப்பட்டனர். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் சிவக்குமார் , சித்தராமையா சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக மக்கள் மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியின் ஊழலை எடுத்துக் கூறி நிரூபித்து வந்தார்கள்.


புதுச்சேரியில் கள்ளச்சாராயம், கஞ்சா அமோக விற்பனைக்கு தற்போதைய பாஜக அரசுதான் காரணம். புதுச்சேரி  மாநிலத்தை குட்டிச்சுவர் ஆக்கி வருகிறது. அண்ணாமலைக்கு தெம்பு திராணி இருந்தால் புதுச்சேரி முதலமைச்சரை ராஜினாமா செய்ய சொல்லி வற்புறுத்துவாரா? தமிழகத்திற்கு ஒரு நீதி புதுச்சேரிக்கு ஒரு நீதியா? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் தமிழகம் அமைதியாக இருக்கின்றது. இதை உச்ச நீதிமன்றமும் சொல்லி உள்ளது. ஆனால் இடையில் ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது. 25 நபர்கள் விஷச்சாராயம் குடித்து இறந்துள்ளார்கள். இதில் முக்கியமான சம்பவம் மரக்காணத்தில் உள்ள சில்லறை வியாபாரிகளுக்கு புதுச்சேரியில் இருந்து சாராயம் வந்துள்ளது. இதை விநியோகம் செய்தவர்கள் புதுச்சேரியினர். புதுச்சேரியில் கடந்த 20 ஆண்டுகளில் 400-ஆக இருந்த மதுபான கடை 900-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மதுக்கடை லைசன்ஸ் வாங்க 20 லட்சம் லஞ்சம் வாங்கப்படுகிறது. குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள் பக்கத்தில் மதுக்கடைகள் அமைக்கப்படுவதால் புதுச்சேரியில் மக்கள் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள். நான் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவன் என்பதில் எனக்கு அவமானமாக உள்ளது. இதற்கெல்லாம் காரணம் முதலமைச்சர் ரங்கசாமி தான். காவல்துறை அமைச்சர் நமச்சிவாயம்தான் பொறுப்பு. புதுச்சேரியில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியவில்லை, காவல் துறை மாமூல் வாங்கிக்கொண்டு கட்டுப்படுத்த தவறுகிறது. தமிழகத்தில் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் புதுச்சேரியில் ஒருவர் மீது கூட நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக புதுச்சேரியில் கள்ளச்சாராய வியாபாரிகள் பெருத்துள்ளார்கள்” என்றார்.